| (42 - 44) பூவார்சோலைப் புறத்தகப்படுத்து மேவரத்தடைஇய விதுக்குறை கடுக்கும் திவள்ஒளி மாண்ட குவவுநுதல் - அக் கூந்தலாகிய மலர் நிறைந்த சோலையின் புறத்தே அதனை யுட்படுத்திக் கொண்டு தங்குமாறு தடையிட்ட குறைமதி போல்கின்ற பரவின வொண்மை மிக்க பெரிய நுதலினையும், (44 - 47) வாணுதல் தீங்கதிர் அமிழ்தத்திங்கள் பிளவின் நீங்குகார்க் கறையும் நிலாத்தவழ் வெண்மையும் விராய் உருக்கொண்டென மிளிர் மதர் மழைக்கண் - விளக்கமுள்ள அந்நுதலாகிய தண்ணிய கிரணத்திற் கிடனான அமிர்தவுருவான அக்குறை மதியினின்று நீக்கமுற்ற கரியகளங்கமும், அதன் நிலவின் வெண்மையும் விரவி உருக்கொண்டாலொத்த மாசில்லாதமதர்த்த குளிர்ச்சியான கண்ணினையும், குறைமதிக்குக் களங்க மின்மையின் நீங்குகறையென்றனர். இது வண்ணவுவமம், நிலவின் களங்கமும் வெண்மையும் ஒரோ வழிக் கலந்துருக் கொண்டாலொத்த கண்ணெனவே அவை அங்ஙனமாகி யுருத்திரிதலின்மையால் வேறுவமம் அக் கண்கட்கமையா தென்றவாறாயிற்று. (48 - 49) செங்குமுதத்துச் சிறுமதி கிடந்தெனச் செவ்வாயகத்த செய்தீர் வெண்பல் - செங்குமுதப் பூவினில் இளம்பிறை கிடந்தா லொத்ததாய், செவ்வாயினிடத்து அழுக்கடையாத வெண்மைத்தான பல்வரிசையினையும், (50 - 51) விலங்குபாய் கதிர்க்குழை வீழ்ந்து செகில்துயல் வர வள்ளையின் ஒழுக்கிய அள்ளெழில் செஞ்செவி - விலகிப் பரவாநின்ற ஒளியையுடைய குழைகள் நான்று தோண்மேலிடத்தே அசையா நிற்ப வள்ளைப் பூவைத் தொங்கவிட்டாற் போலத் தாழ்ந்த அள்ளிக் கொள்ளும்படி செறிந்த அழகுள்ள செவியினையும், செஞ்செவி வார்ந்து தாழ்ந்து மடற்சுழி வலஞ்சூழ முன்புறத்தே தள்ளின செவி. (52 - 59) செவ்வாய் கவுட்டுணைச் சேல்விழி நெற்றி இவ்வாயுறுப்பான் இன்சுவை அமிழ்த உறுகொடை யாற்றிவறிது கொடை காட்டும் வளைநிதி தன்னைக்குடுமிகைக் கொண்டு அவ்வளைமேல் கொண்டு வயங்கு ஒளி தோற்றும் பதுமமாநிதி இதுவெனக் கவன்று தாவா உறுவர் மேவாவுள்ளமும் ஓவப்படமென உஞற்றுறு திருமுகம் - செவ்வாயும், இரண்டு கன்னங்களும், சேல் மீனை யொத்த கண்களும், நெற்றியுமான வுறுப்புக்களைக் கொண்டு இனிய சுவையுள்ள அமிழ்தமாகிய பெரிய வண்மையைச் செய்து வறிய கொடையைக் காட்டாநின்ற சங்கநிதியை அதன் தலையைக் கைப்பற்றி அதன் மேலதாய்ப் பொருந்தி மிக்க பொலிவை வெளிப்படுத்துகின்ற பெரிய பதுமநிதி யிஃதென்று வியந்து கவற்சியாகிக் கேடில்லாத மாதவரது ஒன்றினும் பற்றாத வுள்ளமும் தன்னிலை பெயர்ந்து தடுமாறும் படி ஓவியப்படம் போல நான்முகனாற் படைக்கப்பட்டுள்ள அழகிய முகத்தினையும், |