| உம்மை சிறப்பும்மை. ஒன்றினும் பற்றின்மையாவது கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்குதல். முகம் செவ்வாய் முதலிய வுறுப்புக்களி னிருக்கையதாக லானும், அவற்றைக் காம நூலுடையார் அமிழ்த நிலைகளெனக் கோடலானும், முகம் அவற்றைக் கொண்டு அவ்வமிழ்தத்தினை வழங்குலாகிய கொடையைக் காதலர்க்களிக்கின்றதென அதன் தொழிலாக வுபசரித்தார். அம்முகம் சங்கு போன்ற கழுத்தின் மேலதாய் நிற்றலின் அதனுருவாயுள்ள நிதி அவ்வா றமுதத்தினை யளிக்க மாட்டாமையால், அது தரும் ஏனைய பொருள்களை வறிது கொடையென்றும் அது காரணமாகத் தன்னிற்றாழ்ந்த தாகலின், குடுமியைப் பற்றித் தோற்றார் பிடர்மேல் வென்றார் ஏறுதல் முறையாக மேல்கொண்டு என்றுங் கூறினர். இனி முகத்திற்குவமம் தாமரை யாகலின் அதனுருவாய் நின்று பயன்படும் பொருள்களை யுதவா நின்ற நிதியே இதுவென வியப்பும், தம் மனத்தையுங் கவர்தலால் கவற்சியுமிக்கு அறவோரதுள்ளமும் நிலைதடுமாறும்படி படம்போல்வதாயமைந்தது என வணிந்துரைக்கப்பட்டது. (60 - 63) பகுவாய்ப் பொற்குழை மகரமீன் நான்று ஐதுமீக்கிடத்தலின் ஐங்கணைக் கிழவோன் வெய்து தன்னாணை விளக்கிய வுயர்த்த அணங்குதவழ் கொடியின் இணங்குபணை வேய்த்தோள் - அம் முகத்தின் பாங்கர் அங்காந்த வாயையுடைய சுறாமீன் வடிவாகப் பண்ணின பொன்னாலாகிய குழை தூங்கி, (பகுவாய் மகரப் பொற்குழை யென மாறுக.) வேய்த் தோளின் மேல் அடர்ந்து அசைந்திருத்தலால், ஐந்து மலர்களாகிய அம்புகளையுடைய மன்மதன் கொடிதான தனது ஆணையை யாவர்க்கும் புலப்படுத்துமாறு உயர நாட்டின விருப்பத்தோடு நிகழாநின்ற கொடிக்கம்பம் போலத் தம்மி லிணையொத்த பருத்த ; மூங்கில் போன்ற தோள்களையும், தோளின்மீது மகரக்குழை கிடந்து அசைவது மன்மதனுடைய மீன் கொடி போன்று இருந்தது. (64 - 65) காம்பு புடையடுத்த கதிர் மணிக்குன்றின் தோள்புடையடுத்த சுடர்ப்பூண் கொங்கை - அம் மூங்கில்கள் பக்கத்தின்கண் நெருங்கியுள்ள ஒளிமிக்க மணிகளாற் பொலிந்த குன்றுகளைப் போலத் தோள்களினருகே நெருங்கின சுடரொளியைக் காலுகின்ற மணியணிகள் செறிந்த முலைகளையும், (66 - 69) குவிமுலைத் துணைகொள் சவிமணிமார்பில் தத்தமது ஏணி கடவாது தணிய நள்ளு நின்றுணர்த்தும் தள்ளாக் குறியின் அணிவயிற் றொழுகிய மணிமயிர் வல்லி - அக்குவிந்த கொங்கைகளை யேந்தின விளக்கமான அழகிய மார்பினிடத்தே அம் முலைகள் தமக்குரிய எல்லைகடவாமல் தங்கும்படி நடுநின்று வரையறை யுணர்த்தா நின்ற நீக்கப்படாத அடையாளம்போல மென்மையான வயிற்றின்கண் ஒழுங்குறப் பொருந்தின கரியமயிர் ஒழுங்கினையும், (70 - 72) நெடுகுமயி ரொழுக்கு நெடுவழிப் படர்ந்து கடுமுலைக் கோட்டுக் களிறுபட எடுத்த படுகுழி அனைய பயம்படு |