| கொப்பூழ் - அந்நீண்ட மயிரொழுக்கமான நெடிய வழியே சென்று பருமை தம்முளொத்த முலைகளாகிய கோட்டியானைகளகப்படுமாறு அகழ்ந்த கொப்பம் போன்று ஆழ்ந்த வுந்தியினையும், கடுத்தல் ஒப்பு. (73 - 74) நடுநின்று வாழ்வோர் நலத்தொடு முரண நடு நின்று தேய்ந்த இடுகுகொடி மருங்குல் - நடுவு நிலைமைக்கண் தங்கி வாழ்வாரது ஆக்கத்தொடு மாறுகொண்டு நடுவே நின்றும் வறுமை கூர்ந்த இளகின கொடியை யொத்த இடையினையும், நடுவு நிலைமைக்கண் நின்றவர்க்குப் பெருக்கமே யுளதாவதன்றித் தேய்வு ஒருபோதும் உளதாகாதென்பது ஒருதலையாயிருந்தும், நடுநின்ற இடை அங்ஙனம் பெருகுதலின்றித் தேய்ந்தமையான் அவர் நலத்தொடு முரணவென்றார். இஃதோரிலக்கணை. (75 - 77) வையகம் உயிர்த்தோன் மதிபுனைந்து இயற்றலின் கை புனைந்தியற்றுங் கதிர்மணித் திண்டேர் கடாது உருக்கொண்டு ஓடும் தடாத பேர் அல்குல் - உலகங்களையீன்ற நான்முகன் மதிமிக்குப் படைத்தவாற்றால் யவனர் கைத்தொழில் வல்லரா யியற்றின கதிரொளியைச் செய்கின்ற திட்பமான தேரினை யொவ்வாமல், இயற்கை யுருவிற்றாய் ஆடவர் உள்ளந் தோறும் விரைந்து செல்லும் செலவிற் றடைப்படாத அகற்சியையுடைய அல்குலினையும், யவனர் கையாலியற்றின தேர், இத்துணை வலிமைத்தன்றா மாகலின் அவ்வுருக் கொண்டோடும் தடாத பேரல்கு லெனப்பட்டது. (78 - 79) கீழ்மேலாகக் கிளர்ந்து எழின் அத்தகு வாழையொடு பொரூஉம் வார்ந்த செறிகுறங்கின் - பருத்த அரைமேலதாக வளர்ந்தெழுந்தால் (இது இல் பொருளுவமை) அப்புதுமைத்தான வாழையை ஒக்கும் நெருங்கி நீண்ட தொடைகளையும், வாழையொடு என்பது வேற்றுமை மயக்கம். (80 - 82) வேற்றொரு தாமரை மேவந்து தொழில்செய வீற்றிருந்தருளும் விரைமல ரேய்க்கும் அலத்தக மலர்ந்த நலத்தகு சீரடி - வேறோர் தாமரைப்பூ விரும்பி வந்து பணி செய்யாநிற்ப, அரசிருக்கா நின்ற மணமுள்ள தாமரைப் பூவைப்போன்ற செம்பஞ் சூட்டிய அழகுள்ள மென்மையான கால்களையும், வேறொரு தாமரை செம்பஞ்சிற் குவமம். இது வண்ணவுவமம். சீர் என்னும் பலபொருளொரு சொல் ஊறெட்டனு ளொன்றாகிய சீர்மையினை யுணர்த்தி நின்றது. | * | ஊறு எட்டாவன-வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, திண்மை, நொய்மை, சீர்மை, சர்ச்சரை. |
|