பக்கம் எண் :

திருநகரப் படலம்155

 கரங்கள் படைத்தங் கிருந்ததுபோற் காமர் வளங்க ளனைத்தினுக்கும்
 அரங்க மெனவோங் கியகுன்ற மழல்செய் காந்தள் மலர்ந்ததே.

(இ - ள்.) வரங்களை விரும்பிச் செல்கின்ற தேவருலகத்தின்கணுள்ள தேவர்களும், பூமியின்கணுள்ள மக்களும், பாதாள வுலகத்தின்கணுள்ள நாகர் முதலிய யாவர்களுக்கும் இனிதாக இரக்கமடைந்து கையொழியாது கொடுத்தலைக் கருதி அளவிடமுடியாத கைகளைப் பெற்று அங்கிருந்ததைப்போல விருப்பம் வரத்தக்க வளப்ப மெல்லாவற்றிற்கும் இருப்பிடமென்று சொல்லும் வண்ணமோங்கிய தணிகை மலையின்கண் செங்காந்தள் மலர்ந்துள்ளது.

(வி - ம்.) கரங்கள் படைத்ததுபோல மலர்ந்ததென வினைமுடிவு செய்க. கைதூவாது - கையொழியாமல். அழல்செய் காந்தள் - தீப்போன்ற செங்காந்தள்.

(134)

 காலந் தொறுநன் றியம்பலுறுங் கணங்கொ ளியப்பே ரொலிச்செறிவான்
 மூலந் தொடங்கிப் பேரண்ட முகடு காறு நெக்குடைய
 ஞாலந் தொடுத்துப் பலமதலை நாட்டிக் கொடுத்தா லெனவோங்கும்
 கோலந் தழைத்துப் பலதிசையுங் குன்றத் தெழுந்த கோபுரமே.

(இ - ள்.) பல திசையின்கண்ணும் அழகு தழைக்கப்பெற்றுத்தணிகை மலையின்கண் எழுந்துள்ள கோபுரங்கள் காலங்கடோறும் நன்றாக ஒலிக்கின்ற கூட்டத்தைத் தன்னிடத்தே கொண்ட வாத்தியங்களின் முழக்கத்தின் செறிவினாலே அண்டமுகடானது தன் அடி தொடுத் துச்சிவரையும் பிளந்துடைத்தலால் (அவ்வண்டங் கீழ்விழா வண்ணம்) பூமியினின்று தொடங்கிப் பல தூண்களையூன்றிக் கொடுத்ததுபோல உயர்ந்து தோன்றும்.

(வி - ம்.) அண்டமூலம் - அண்டத்தினடி. அண்டமானது தன் மூலந்தொடங்கித் தன் முகடுவரையும் நெக்குடைதலானென்க. மதலை - தூண்.

(135)

 பிரம வுலகத் தயனுயர்த்த பிணைமென் சிறையோ திமக்கொடியும்
 வரவை குந்தத் தரியுயர்த்த வகிர்நா வரவப் பகைக்கொடியும்
 இரவும் பகலு மடிவருட வெழுந்து வானத் திலங்குகந்த
 புரநன் குயர்த்த கொடியுமாய்ப் பொலியுந் திருமுற் றனிக்கொடியே.

(இ - ள்.) (குமரநாயகன்) சந்நிதியின் முன்னுள்ள ஒப்பற்ற மயிற்கொடியானது பிரம வுலகத்தின்கண் பிரமனாலுயர்த்திக் கட்டிய (ஒன்றோடொன்று பிணைந்த) மெல்லிய சிறகையுடைய அன்னக்கொடியும் மேலாகிய வைகுந்தத்தின்கண் அரியாலுயர்த்திக் கட்டிய பிளந்த நாவினையுடைய அரவங்களுக்குப் பகையாகிய கருடக்கொடியும் இரவினும் பகலினும் அடியைத் தைவர உயர்ச்சியுற்று ஆகாயத்தின்கண் விளங்குகின்ற கந்தருலகத்தின்கண் நன்றாக உயர்த்திக் கட்டிய கொடியுமாகி விளங்கும்.

(வி - ம்.) வரம் - மேன்மை. வகிர்நா - பிளவுபட்டநா. அரவப்பகை - கலுழன். திருமுன் - சந்நிதி.

(136)