| மன்றல் புரியு மண்டபமும் வயங்கு மூர்தி மண்டபமும் | | பொன்றுஞ் சிரத மண்டபமும் பொற்ற விமான மண்டபமும் | | துன்றும் யாக மண்டபமும் தொக்க விழாமண் டபமெல்லாம் | | குன்ற மிசைபன் மணிக்குவடு குலாய்விண் ணிவந்த காட்சியவே. |
(இ - ள்.) கலியாண மண்டபமும் விளங்குகின்ற வாகனங்கள் வைக்கு மண்டபமும், அழகு தங்கப்பெற்ற வெள்ளி மண்டபமும், பொலிவுபெற்ற விமானங்கள் வைக்கு மண்டபமும், பொருந்திய யாக மண்டபமும், மக்கடேவர் முதலிய யாவரும்வந்து கூடுதற் கேதுவாகிய திருவிழா மண்டபமுமாகிய இவையெல்லாம் அத்தணிகை மலையின்மீது பலமணிமயமாகிய சிகரங்கள் விளங்கி ஆகாயத்தின்க ணுயர்ந்த தோற்றத்தை ஒத்தன. (வி - ம்.) பொன் - அழகு. துஞ்சுதல் - நிலை பெறுதல். "துஞ்சலே நிலைபேறாகும்" என்னும் நிகண்டா னறிக. இரசிதம் - வெள்ளி. தொக்க - கூடிய. பன்மணிக்குவடு - பலமணிவடிவமாகிய சிகரங்கள். (137) | போற்றவடுத்தோர் கொணர்ந் திறுக்கும் பொன்னங் கிழிக்குன் றுகளொருபால் | | தோற்றும் வெள்ளி வரையொருபாற் றூசு மூடை யடுக்கொருபால் | | வீற்று மணியின் றிரளொருபால் விழுப்பல் பொருளின் பரப்பொருபால் | | ஏற்று வளைவாய்ப் புள்ளொருபா லெண்ணி வரைத லரிதாமால். |
(இ - ள்.) முருகப்பெருமானைத் துதிக்கப் பொருந்தியோர் காணிக்கையாகக் கொணர்ந்து சேர்க்கும் அழகிய பொன்முடிப்பாகிய மலைகள் ஒருபக்கலில் உள்ளன. ஒளியை வெளிவிடுகின்ற வெள்ளிக் குவியலாகிய மலையொரு பக்கலில் உள்ளது. அறுவை மூடையின் அடுக்குகள் ஒருபக்கலில் உள்ளன. வெவ்வேறு வகையாகிய நிறங்களையுடைய மணிகளின் குவியல்கள் ஒருபக்கலில் உள்ளன. விழுமிய பலவாகிய பதினெண் வகைக்கூல முதலிய பொருள்களின் மிகுதி யொருபக்கல் உள்ளது. வளைந்த வாயையுடைய ஏற்றுப்புள்ளாகிய சேவல் முதலிய பறவைகள் ஒருபக்கலில் உள்ளன. இவைகளைக் கணக்கிட்டு வரையறைப் படுத்தல் இயலாததாகும். (வி - ம்.) இறுக்கும் - சேர்க்கும். கிழி - முடிப்பு. மூடை - மூட்டை என இக்காலத்து வழங்கப்படுகின்றது. இதனைக் "காலின் வந்த கருங்கறி மூடையும்" என்னும் சிலப்பதிகார அடியானறிக. பரப்பு, ஈண்டு மிகுதியை யுணர்த்தி நின்றது. ஏற்று வளைவாய்ப்புள் - ஆணாகிய வளைந்த வாயையுடைய பறவை; அவை முருகனைக் கருதிப் பராய் விடுத்த மயில் சேவல் முதலியன. (138) | நகர்சூழ் வட்ட நீர்க்கோடு நகுபன் மணிமா ளிகைபல்வீ | | தகுமா நகர மணிப்பொய்கை தனிற்சூழ் மதில்க ளிதழ்வரிசை | | திகழ்சீ ருச்சி பொகுட்டாய தெய்வ வரைத்தா மரைக்கிழவன் | | புகழ்சூழ் பொய்கை மலரிருந்த பொற்பும் விளங்க வீற்றிருக்கும். |
|