பக்கம் எண் :

திருநகரப் படலம்157

(இ - ள்.) தணிகை நகரத்தைச் சூழ்ந்தமதில் குளக்கரையாகும். விளங்குகின்ற பல இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகள் பல மலர்களாகப் பொருந்தும். பெருமையையுடைய அந்நகரம் முத்துக்களையுடைய பொய்கையாகும். தணிகைவரையைச் சூழ்ந்த மதில்கள் பூவிதழின் ஒழுங்காகும். விளங்குகின்ற சீரினையுடைய சிகரம் கொட்டையாம். இவ்வண்ணமாகிய தெய்வத் தன்மையையுடைய அம்மலையாகிய தாமரை மலரிடத்து அதற்குரிய முருகக்கடவுள் புகழ் சுற்றிய சரவணப் பொய்கையின்கண் தாமரைமலரில் எழுந்தருளியிருந்த அழகும் ஈண்டும் விளங்காநிற்க எழுந்தருளியிருக்கும்.

(வி - ம்.) ஆகுபெயராய்க் குளத்தின்மேற்று. கோடு - கரை. பல்வீ - என்றது தாமரையல்லாத ஏனைய பூக்கள். ஆய என்னும் உருவக முணர்த்தி நின்ற பெயரெச்சத்தை எல்லாவற்றோடும் கூட்டுக. வரைத்தாமரை - வரையாகிய தாமரை. பொற்பும் என்பதன் கண்ணுள்ள உம்மை இறந்ததுதழீஇய எச்சப்பொருட்டு. கிழவன் தாமரைக்கண் வீற்றிருக்குமென வினைமுடிவு செய்க.

(139)

 மன்னு மிருமா யையுங்கடந்து வயங்கு மிறைவர்க் கம்மாயைத்
 துன்னு மணிபொன் னமிழ்தாதி தொடுத்திட் டுவமை வழங்கியாங்
 கென்னு நிகராப் பொருள்களே தன்மாட் டுவம மெடுத்தவெனக்
 கொன்னு மதியிற் கூர்த்தவர்கள் குறிப்ப ரிதற்கோர் நிகரின்றே.

(இ - ள்.) நிலைபெற்ற தூயமாயை, தூயதல்மாயை என்னுமிருவகை மாயைகளையும் இயல்பாகவே நீங்கி விளங்குகின்ற இறைவற்கு அம்மாயா காரியமாகப் பொருந்தும் மணிகளும், பொன்னும் அமிழ்தும் முதலாகிய பொருள்களைப் பாடலிற் றொடுத்து உவமையாக வழங்கினாற்போலச் சிறிதும் ஒப்பாத பொருள்கள் இந்நகரத்திற்கு உவமமாக எடுத்துக் கொள்ளப்பட்டன என்று பெருமை பொருந்திய அறிவினால் நுனித்துணர்ந்த பெரியோர்கள் சிந்திப்பர். ஆதலின் இம்மலைக்கு ஒரு பொருளும் நிகரின்று.

(வி - ம்.) தூயமாயை - சுத்தமாயை. தூய்தல்மாயை - அசுத்தமாயை. என்னும் - சிறிதும். கொன்என் இடைச்சொல் பெருமையுணர்த்திற்று. என்னை? "அச்சம் பயமிலி காலம் பெருமையென், றப்பா னான்கே கொன்னைச் சொல்லே" என்பதோத்தாகலின்.

(140)

 வெள்வே லிறைவ னறைக்கமல விரைசூழ் பதந்தை வருமுள்ளத்
 தள்ளூ றின்பப் பெருவெள்ள மடங்கா தெழுந்து வீறுதல்போல்
 தள்ளா வளத்து நகரியல்பு சாற்றப் புகுத லொடுமன்னோ
 விள்ளா தெழுந்த பேரார்வ மிகையைத் தணித்தாங் கதைபுகல்வாம்.

(இ - ள்.) வெள்ளிய வேற்படையையுடைய முருகக் கடவுளது தேனுடன் கூடிய மணமுடைய தாமரைமலர் போன்ற திருவடியைத் தடவி வருகின்ற உள்ளத்தின்கண்ணே செறிந்து ஊறுகின்ற இன்பமாகிய பெரிய வெள்ளமானது தடைபடா தெழுந்து மிகுமாறுபோல நீங்காத வளத்தையுடைய தணிகை நகரத்தின் இலக்கணத்தை விரித்துக்