பக்கம் எண் :

1550தணிகைப் புராணம்

(99 - 100) பல்வகைக் கணமும் பணிந்தெழுந் தேத்தத் தெவ்வுத் தானவர் அவ்வித் தேங்க - அமரர் சித்தர் முதலிய வெவ்வேறான பலகணங்களும் வணங்கியேத்தா நிற்பவும், அவருட் பகைமையை யுடைய வசுரர்கள் தனது ஆக்கப் பெருக்கங்கண்டு மனக்கோட்டத்தால் பொறாதவர்களாய்ப் புழுங்கா நிற்பவும்,

(101 - 104) விரிகதிர்ப் பிழம்பும் அரிமான் தவிசின்களிகூர் நெஞ்சால் காவல் வைகும் ஒளிகூர்மகவான் உறுபதமாதி எளிதின் உய்த்தளிக்கும் தெளிவினை போலாது - பரந்த கதிரொளியை மிகப் பரப்புதற்கிடமான அரியணைமேல் உவகை பெருகும் உள்ளத்தோடும் அரசு வீற்றிரா நின்ற பாட்டு முரையுமான புகழ் மிக்க இந்திரற்குரிய பத முதலியவற்றை எளிதிற் கைகூட்டுவித்தற்குக் காரணமான நல்வினை போல்வதன்றி,

பிழம்பும் என்றது பண்படியாக வந்த பெயரெச்சவினை. நெஞ்சால் என்பது வேற்றுமைத் திரிபு. காவல் வைகு மென்பதனை ஒரு சொல்லாகக் கொண்டுரைக்க. ஆதிய என்பது குறைந்து நின்றது. வீடுபேற்றிற்கு வேண்டுவனவாகிய அத்துணை யாற்றலுடைமை முத்தி பதப்பேற்றிற்கு வேண்டாமையால் எளிதினுய்த்தளிக்கு மென்றும், நல்வினையும் பிறவிக் கேதுவாமெனப் பெரியோரால் தெளியப்பட்டதாகலான் தெளிவினை யென்றும், பின்னர்க் கூறப்படும் பயிற்சிகளாற் பெறத்தக்க வீடுபேறு ஒருவாற்றானும் இவற்றை யொவ்வாதாகலான் போலாதென்றுங் கூறினர். பொங்கர் முதலியன வளங்கொழிப்ப ஏத்த ஏங்கத் தவிசிற் காவல் வைகும் மகவான் பதமாதிய அளிக்கும் வினைபோலாதென முடிக்க.

பார் என்பது முதல் பிறக்கணித்துகவும் என்னுமளவும் ஒரு முடிபு.

(105 - 107) பார்முதிர் புணரிப் பாயற்கடவுள் வார்மதுப் பொகுட்டு மரைமலர்ப் புத்தேள் என்று இவர் தமக்கும் எய்தற்கரிய-பாராகிய நிலத்தினிடத்தே முதிர்ந்த பாற்கடலின்கண்ணே சேடனாகிய படுக்கைமேற் கண்வளர்கின்ற நெடுமாலும் பெருகா நின்ற தேனோடலர்ந்த தாமரைப்பூம் பொகுட்டினிடத்தே தங்கும் நான்முகனுமான இன்னோரானும் எளிதின் அடைதற்கியலாத,

உம்மை : உயர்வு சிறப்பு.

(108 - 109) சரியை கிரியை யோகத்தவநிலைப் பெயர் பொச்சாப்பப் பிறக்கணித்துகவும் - சரியை கிரியை யோகங்களென்னும் ஒப்பற்ற சாதனங்களின் பெயர்கள் மறக்குமாறு குறிக்கொள்ளாது கைவிடுதலானும்,

தத்தம் வருணநிலை வழாது நின்று தேசிகரிடத்தே மிருதி மறைநெறி முதலியவற்றைப் பயின்று எல்லாவற்றிற்கும் முடிவான மெய்ப்பொருளைத் தேறிப் பின்னர் அம்மெய்ப்பொருளாகிய இறைவனை நோக்குமதியாலுயர்ந்து சமய தீக்கை பெற்று இறைவனது திருக்கோயிலில் திருவலகிடல் - மெழுகல் - மலர் கொய்தல் - மாலை முதலிய தொடுத்தல் - தீபமேற்றல் - மெய்யடியர் பணித்த பணி தலைநின்று மேவல் இவை முதலான