பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1551

சகலமென்றும், மலமுற்று நீங்கிப் பிறவியற்ற வமயம் சுத்த மென்றும் விளங்குமாறும், விஞ்ஞானகலர் முதலிய மூவகை யுயிர்களின் வினைகட்கும் முன்னிலையான ஆறு அத்துவாக்களினும் முறைப்படிக் கன்மங்களை யூட்டித் தொலைத்து அவாவெகுளி அறியாமை என்னும் தளைகளின் நீக்கி முதிர்ந்த பக்குவத்தின்கண் இறைவன் குருவாய் வந்து அத்துவா ஆறினையுந் தூய்மைசெய்து பிராரத்த கன்மங்களை யுண்பித்துத் தீக்கைக்குப் பின்னர் ஏறின ஆகாமியவாணவங்களையும் ஞானத்தீயினால் தகிக்குமாறு மென்பது. அருளினியல்பு தெரிவித்தலாவது உயிர்கட்கு மெய்யுணர்வைத் தெருட்டி ஆத்மஞானந் தோற்றுவித்து அருவமான இறைவன் வெளிப்படுதற்குத் தனது கருணையினால் குருவடியாய் வருவது அருட்சத்தியே யென்பது. அதன்பயன் தெரிவித்தலாவது அப்போது பூதமுதல் நாதமீறான பிரபஞ்சமெல்லாந் தன்னுள்ளே விளங்க இறைவன் சிறுமைக்குச் சிறுமையாகவும் பெருமைக்குப் பெருமையாகவும் உயிர்க்கு உயிராகவும் நிற்கு நிலைமைகள் விளங்குமென்பது. பெரும் பெயர்த்திறந் தெரிவித்தலாவது இறைவன் அருவுருவம் குறிகுணங்கள் தோற்றக்கேடுகள் பந்தவீடுக ளின்றி நித்தமாய்த் தானெல்லாவற்றையுங் கலந்து தன்னை யொன்றுங் கலத்தலின்றி நிருவிகாரியாய் எஞ்ஞான்று மொருதன்மை யுடையவனா மென்பது. பெற்றவர் முறை தெரிவித்தலாவது அம் மெய்ப் பொருளை அதனோடொற்றுமையுற இடைவிடாது பாவனை செய்து காண்பார்க்கு விழைவு வெகுளிகளும் கரணவாதனையும் முக்குணச் செயல்களும் ஓரடையாளமும் நியமங்களும் வறுமை வாழ்வுகளும் இவை முதலிய இல்லையாய் இறைவனடியை நீக்கமற நினைந்திருக்கை யென்பது.

(119 - 122) தாழாது கேட்டு வீழாது சிந்தித்து அங்கைக் கொண்ட அமிழ்தெனத் தெளிந்து பொங்குபே ரின்பம் புணராது புணரும் நிட்டைகூட நிலையதும் நீங்கவும் - மனம் புறம்பே சென்று தங்காமல் அவ் வேழு வகையினையுங் கேட்டு விபரீத ஐயங்களுள் வீழ்ந்து மயங்காமல் சிந்தித்து உள்ளங்கைக் கண் ணேற்ற அமிழ்தினை யுள்ளும் புறம்பும் கண்கூடாகத் தெளியுமாறுபோல் அவற்றைத் திரிபறத் தெளிந்து தலைசிறந்த பேரின்பவீட்டைக் கலவாமற் கலப்பதற்குக் காரணமான தியான சமாதியைக் கூடுகின்ற அந் நிலையும் நீங்கவும்,

இது நன்னெறியாகிய மெய்யுணர்வு நிலையாம். நிட்டைகூட நிலையதுமெனப் பாடமோதி நிட்டை கைகூடலாகிய நிலையென வுரைப்பது மொன்று. நிலையது என்பது ஈண்டு ஒரு சொல் நீர்மைத்தாய் நின்றது. உம்மை எச்சவும்மை. என வென்பது வினை யெச்சவுவம மாகலான் அமிழ்திற்றூய்மை இனிமைகள் போல் அவற்றில் தெளிவுண்மை நன்மைகள் கூடலின் வண்ணவுவமமும், அமிழ்து மரிப்பை யொழிக்குமாறுபோல் அவை பிறப்பிறப்புக்கட் கேதுவான அறியாமையாகிய இருளைப் போக்குவதால் தொழிலுவமமும் பெறக்கிடந்தவாறு காண்க. பொங்குபேரின்பமாவது நிரதிசய வின்பம். அதனின் மிக்கதோர் சீரிய வின்பம் பிறிதொன்றின்மையின் "உயர்வற வுயர்நல மென" அதனை யுணர்ந்த பெரியார் பணித்ததுமது. புணராது