பக்கம் எண் :

1552தணிகைப் புராணம்

புணர்தல் ஒருகால் நீங்கிப் பின்பு கூடாமல் இடையறக் கூடல். அங்ஙனங் கூடற்குக் கருவியாயுளது நிட்டையாம். அது கேவல சகலங்களைப் பொருந்தாமல் மெய்யுணர்வை யடைந்து அவ்வுணர்ந்தவாற்றாற் குறிக்கொண்டு நேயத்தோடு கூடியிருக்க எங்கும் கலந்து நிறைந்திருப்பவனான இறைவன் தானே தோன்றி எல்லாப் பொருள்களும் அவனாகவும் அவ் வுருவமனைத்தும் இறைவனல்லாதனவாகவும் காணப்பட்டு அவையனைத்திற்கும் வேறாகிய நிராதாரனாகி யெப்பொழுதும் தோன்ற நிற்குநிலை யென்பர். இவற்றால் குருமொழியைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என மெய்யுணர்வை யடைந்தார் பெறும் பயன் நால்வகைத்தென்றதாயிற்று. ஊனநாடக முஞற்றிய அருள் ஞான நாடக நவிலிய மாறலும் கழல மடங்கக் குருவாகி உயிர்முத லெழுவகையினையுந் தெரிவிப்பக் கேட்டு நினைத்துத் தெளிந்து புணரும் நிலை நீங்கவுமென முடிக்க.

பஃறிறப் பகைஞரென்பது முதல் இரவல என்பதனளவும் ஒரு முடிபு.

(123 - 127) பல்திறப்பகைஞர் படையொடு நேர்ந்தென வெல்திறம் காட்டாது வீற்றுவீற் றுடற்றும் பிணிக்கோட்பட்டு பேதுறு மனத்தான் முந்தையோர் ஈட்டும் முழுநிதிச் செல்வமும் பொய்ம்மையாளர்புகழெனத்தேய-பலதிறங்களாலாற்றலுடைய பகைவர் படையொடு மெதிர்ந்தாற்போலத் தம்மை வெல்லு முபாய மேற்கொள வொட்டாமல் வேறுவேறாய்ப் பலவாற்றினு மூண்டு வருத்தாநின்ற நோய்களாற் பற்றப்பட்டுப் பித்துறுகின்ற உளத்தனாகித் தன் தாதை மூதாதைய ரீட்டின பெருஞ் செல்வங்களும் பொய் கூறுவாரது புகழ் தேயுமாறுபோலத் தேய,

பலதிற மாவன துணை சுற்றம் பொருள் இவை முதலியன. ஆகி : முற்றெச்சம். பேதைமைக்குக் காரண மிரண்டனு ளிது காமத்தான் வந்ததாகலான் தனக்குறுதி பயவாத அவ் வொழுக்கத்தின்கண் விரும்பிச் செய்தமைபற்றி வந்த மயக்குற்ற மனத்தானென்றார். பொய்யர் பொய் கூறுவாரெனக் கூறாது பொய்யைத் தாமே யாளமாட்டாமே பொய்ம்மையால் தாம் ஆளப்பட்டாரென முன் செய்த புகழுந் தேயு மென்றற்கு அதனை வற்புறுத்தினார். இவ் வுவமத்தால் இவனாலீட்டப்பட்ட பொருளும் ஒருங்கு தேய்தல் பெறப்பட்டது.

(128 - 132) நோய்ப் பகையாளர்க்கு நொடிந்தென் சிதரின் பல்வகை மருந்துக்குப் பகர்விலை தொலைச்சி அதுவென வெறுவியது அன்றுமற்றிதுவென முன்னைநாள் மருந்தை முறை முறை இகழா பின்னை நாள் மருந்தை பெட்டுவாய் மடுத்து - நோயாகிய பகையாற் பீடிக்கப்பட்டாற் பொருட்டு யாது சொல்லினு மென்னை சிறிது சிறிதாகப் பல்வேறுவகைப்பட்ட மருந்தினுக்கும் மருத்துவன் சொல்லி யளந்த விலைப்பொருள்களை யிறுத்து இது முற்பகலுண்ட மருந்துபோலப் பயனிலதன் றென்று மருத்துவனுபசரித்தலும் அவ்வாறே முன்னை நாளிலுண்ட மருந்தினை ஒரோவொன்றா யவமதித்துப் பின்னைநாளி லேற்றின மருந்தினை யார்வமிக்கு உண்ணுதலும்,