| நற்கருமங்களைப் புரிவது தாதநெறியாகிய சரியையாம். இதனை முற்றிய பின்னர் மகநெறிக்கான விசேட தீக்கையைப் பெற்றுப் பூசனைக்கேற்ற திருப்பள்ளித்தாம முதலியவற்றைச் சேகரித்துச் சுத்தி ஐந்துஞ் செய்து பதுமாசனம் பூசித்து அதன்மேல் மூர்த்தியைப் பாவித்து மூர்த்திமானாகிய இறைவனை எழுந்தருளச் செய்து பேரன்பினால் ஒருமைப்பட்ட மனத்தொடு வழிபட்டுத் துதித்து ஆவரண பூசை முதலியவும் புரிந்து அழலோம்புதல் புத்திர மார்க்கமாகிய கிரியையாம். பின்பு இயம நியம முதலிய யோக வுறுப்புக்களான எண்வகை யியல்பும் வாய்ந்து பிங்கலை இடைகலைகளை யடக்கி உயிர்வளியை நடுநாடியினிறுத்தி ஆதாரமாறினையும் அவற்றிலுள்ள பொருள்களையு முணர்ந்து தியானித்து மூலாதாரத்தி லனலையெழுப்பி உந்தியினிடத்தே குண்டலி சத்தி யுருவாயிருக்கும் அமிர்தினை யுருகப்பண்ணி மற்றைய வாதாரங்களின் கீழ்முகமாயுள்ள பதுமங்களைப் போதித்து மேலே சென்று சோமவட்டத்திற் பெருகாநின்ற வமிர்தினையுண்டு பேரொளியான இறைவனைத் தியானித்து அவ்வொளியுடன் கூடியிருத்தல் சகமார்க்கமாகிய யோகமாம். இவற்றின் பயன் முறையே இறைவனுலகு இறைவனருகு இறைவனுருவடைவது. இவற்றின் விதியைச் சிவாகமங்களினுய்த்துணர்க. கடவுள் புத்தேள் இவர் தமக்கு மரிய சரியை கிரியை யோகத் தவநிலைப் பிறக்கணித்துகவுமென முடிக்க. ஊன நாடக மென்பது முதல் நிலையது நீங்கவும் என்னுமளவும் ஒரு முடிபு. (110 - 111) ஊன நாடகம் உஞற்றிய திருவருள் ஞான நாடகம் நவிலிய மாறலும்-இதுகாறும் மாயா காரியமான நாடகத்தினை நடாத்திய (இறைவனிடத்ததான) அருட்சத்தி இனி ஞான நாடகத்தை நடாத்தும் பொருட்டுத் திருவுளந் திரும்பின வளவில், உயிர் தன்னை யித்தன்மைய னென்றுணருமாற்றினை மறந்து தன்னின் வேறாய யாக்கையைத் தான்றானென்று கருதிப் பொருட் சார்பு உயிர்ச் சார்புகளை நிலைத்திருப்பன என்று எண்ணித் துன்பத்துட்பட் டுழலுமதனை ஊன நாடகமெனவும், இவ்வமயத்தும் அதனுடன் கலந்து நின்றே கலப்பில்லாத தாகலான் அதனை யுஞற்றிய திருவருளெனவும், அவ்வாறுழன்று தனது பதியையு மறியாது வருந்தின அவ்வுயிரைச் சத்திநிபாதா நுகுணமாகத் தீக்கை செய்து கருணையால நுக்கிரகிக்கு முறையினை ஞான நாடக மெனவும், அத்திருவருளே அப்பருவத்தின்கண் குருவாய் வந்து அவ்வவத்தைகளினின்று முயிரை விடுவித்து மலவிருளை நீக்கி அவா அறிவு செயல்களை யிடையீடின்றி விளங்கச் செய்வதாகலின் அதனை நவிலிய மாறலு மெனவுங் கூறினர். தனி உயிர் மடங்கக் கட்காண் குருமுதற் கடவுள் ஆகி - அருள் விளைவி னன்றி நீங்காது அநாதியாய் வருகின்ற ஆணவமாகிய பகைவலிமை புரியாமலொழியுமாறும் உயிர் தனியாய்த் தானாகவே பெருகும்படி தனது அறியாமையாகிய மயக்கத்தினின்று நீங்கு Not Keyed |