| நோயாளர்க்குத் தம்மால் தேய்ந்த செல்வத்தினை மீட்டு மீட்டுவான் தக்கவலியின்மையானும், நோயாற் றெறப்படுகின்றாராகலின் அதனைப் புறங்காண்டற்கு மருந்தென்னும் படைக்கல மன்றிப் பிறிதொன்றின்மையானும், அதனைக் கொள்வான் பொருள் கொடுக்கற்பால தின்றியமையாமையாகலானும் நொடிந் தென்னெனக் கூறினார். இது இரக்கக் குறிப்பு. சொல்லிப் பயனில்லை யென்பதாம். சிதரென்பது துளி, அவை சிறியனவேயாயினும் பலவும் ஒருங்கு கூடியவழி நீத்தமாமாறுபோலப் பலவகையுள் அவ்வம் மருந்திற்கும் தனித்தனியே பகரும் விலைப் பொருள்கள் சிறிய சிறிய வளவினவேனும் அவ்வகை பலவு முள்ளிட்ட மருந்துகளனைத்திற்கும் வேறுவே றிறுத்தவை பின்னொருங் கெண்ணப்பட்டுழி அளவுபடா வாகலின் அம் மிகுதி தோன்றப் பல்வகை யென்றார். மற்றிது அதுவென வெறுவிய தன்று என்ன எனக் கூட்டுக. மடுத்து : எச்சத்திரிபு. (133 - 134) பருகு பல்மருந்தால் பண்டைநோய் மேலும் மண்டு நோய் வேறு மரீஇக் கிளர்ந்து உருப்ப - அவ்வாறுண்ட பலவேறு மருந்துகள் காரணமாக முன்னைய நோய்களே யன்றிப் பின் வேறு வேறு மிக்க நோய்களு மொருங்கே கூடி மூண்டு கொடுமை செய்தலும், (135 - 136) உரைத்தவென் மொழிவழி யொழுகினையல்லைகொல் நோய் பெருத்துத் தெறுமென மருத்துவனொழிய - இன்ன வின்ன அளவின்கணிற்கவென விதித்த எனது சொற்படி நின்று நடந்தாயல்லையாகலான் இனி அந்நோய்கள் மிக வளர்ந்து கேடு செய்யா நிற்குமென் றச்சுறுத்தி மருத்துவன் கைநெகிழ்ந்து போந்ததால், (137 - 149)தெய்வத்திறத்தால் தீர்வு காண்பாமென உள்ளூர் வயின் வயின் தெள்ளிதினோங்கும் புரிமுறுக்கு அவிழ்க்கும் பூம்புனல் தீர்த்தமும் பல்வகைத் தெய்வப் பசும்பொற் கோட்டமும் படிந்தும் பணிந்தும் பயன் காணாமை - தெய்வதங்களை வழிபடலான் இந் நோய்கள் நீங்கப்பெறுவோமென் றெண்ணித் தான் வாழு மூருள்ளே இடங்கடோறும் அருகில் உள்ள நிலைபெற்ற வண்டுக ளிச்சித்து இதழ்களை முறுக்கவிழ்க்கா நின்ற மலர்களையுடைய நீர்வாவிகளின் மூழ்கியும் பற்பலவான தெய்வங்களது செம்பொன்னாலான கோயில்களைப் பணிந்தும் அவற்றால் தான் வேண்டின பயன் பெறக்கிடையாமையானும், ஊர் ஊர் என்பது அடுக்குப் பன்மை குறித்தது. நிலை பெற்ற புனற்றடமென வியையும். ஏழாவதும் இரண்டாவதுமாக வேறுருபுகளடுக்கி வந்த தொகை. படிந்தும் பணிந்து மென்பது முறை நிரனிறைப் பொருள்கோள். விரதம் நியதி பரவு கடனாதி பல்வேறு தொழிலொடு படர்ந்து பணிந்தேத்தியும் கவலை நெஞ்சம் கையறுபு இனைய - அணித்தாய் அயலான நகர்ப்புறத்துச் சிறப்புள்ள கோயில்களையும் நோன்பு நோற்றல் பூசனை செய்வித்தல் கடவுட்கு இறை உய்வித்தல் முதலான அனந்த |