| செல்லல் இணையடி தாங்க வெயில் பகையுழந்த வேர்ப்புறம் நனைப்ப - அக்கல்லதரினது முற்கூற்றில் பரற்கற்கள் உறுத்தினதா லரும்பின கொடுந்துயரைப் பண்ணுங் கொப்புள்கள் அதன் பிற்கூற்றிலுள்ள பரல்களுறுத்துந் தோறும் வாய்விட்டு வெண்ணீரை யூற்றலால் அப்பா லினிச் செல்லுதற்கு இயலாத நோய்களை இருகால்களுந் தாங்கவும் வெயிலாகிய வெம்பகையிலகப்பட்டதால் எழுகின்ற வெயர்வை நீரால் யாக்கையின் புறமுற்றும் நனைவுபடவும், (160 - 166) சூறை மாருதம் துறைத்துறை எடுத்த பூழி போர்த்த பொற்பறுமாசு கலுழ்நீ ரல்லது கயந்தலையின்மையின் கழுவுதல் புரியா முடைபயில் காயமோடு இலையின் மராத்த நிலையின் மென்னிழல் சேய்வரல் வருத்தம் சிதைபாக்கு அசைந்து நெட்டுயிர்ப்பு எறிந்து நினைதரும் இரவல - அச்சூறாவளி துறைதொறு முகந்து வீசலால் புழுதி மூடின பொலிவற்ற மாசொடு கொப்புளிக்கின்ற வெயர்வைநீ ரன்றி ஆண்டு வேறொரு குளநீரின்மையால் மூழ்கிக் கழுவப் பெறாத தீநாற்றம் நிலைபெற்ற உடம்பொடு இலைகள் வளாருடன் தீந்த மரங்களினது அடிக்கூறாகிய குற்றிக ணிற்கும் நிலைக்களத்திற் கதுவிய சிறு நீழலிடத்தே நீளிடை நின்று வருதலால் முதிர்ந்த வேடையைத் தொலைத்தற் பொருட்டுத் துவண்டு உயிர்ப்பு வீங்கிப் பலவாறு நினைந்து கவலாநின்ற ஆதுரனே, மென்மை சிறுமை குறித்து நின்றது. மரம் என்பது சாரியையும், இடை அகர நீட்சியும் பெற்றது. பலவாறு நினைதலாவன நோயொழிதல் வாழ்நாளளவும் அது வுடம்பொடு கூடி நின்றழிதல், கல்லதர் கடத்தல் மீண்டு தன்னூர்ப் புகுதல் இறைவன் துணை செய்யப்பெறுதல் இவை போல்வன. இனியொருகாற் கூடுங் கொல்லோவெனக் கணந்தோறும் பலவாறு கருதி வருந்துதலாம். நெட்டுயிர்ப் பெறியு மிரவல வென்னாது எறிந்து நினைதரு மிரவலவென இரண்டு விசேடண அடையாற் கூறிய தென்னையெனின், உயிர்ப்பெறித லோசை யூறுகளா லெளிதினுணரப்படும் அவன் மனத்தே நிகழும் நிகழ்ச்சி அவ்வாறுணர்தற் பாற்றோ கழிபெரு வெந்நோய்க் குடம்பையாய உடம்பினனாதலால் அவ்வாறு நோயுழத்தல் நல்கூர்தல் தனிவரல் வெஞ்சுரத்தி லடிக்கண் கொப்பு ளரும்புதல் நிழலின்றி யலமரல் இவை முதலிய பல துயர்க்காரணங்களால் அவன் மனம் பிறிதொரு நிகழ்வின்றி வாளா விருத்தலமையாதோ, ஒரோவழி நிகழ்ந்துழி அஃதயற்கண் பிறராலுணர்தற்கியன்றதோ வெனின், இயலும், இவ்வாற்றுப்படுத்துவோன் தானும் முன்னர் ஆதுரனாயிருந்து ஒழிந்த வுல்லாபனாதலால் உயிரதுணர்ச்சியினை முகம் கண் முதலியவற்றாலுணர்தல் மாத்திரை யன்றித் தன்னுள்ளே முன்னர் நிகழ்ந்தவற்றிற் பயிற்சியுண்மையானு முணர்தற்கியலுமது ஒருதலையாதல் பற்றி உயிர்ப்பெறிந்து நினைதரு மிரவல வென்னப்பட்டது. இஃதாற்றுப்படுத்துவோன் கூறுங்கூற்றாகக் கற்றுவல்ல புலமை மேம்பட்ட இந் நூலாசிரியர் கூறியது தொல்லோர் வழக்கு. "குறிப்பிற் குறிப்புணர் வாரை" யெனப் பெரியர் விதித்துரைத்த திருக்குறளானு மிதனையுய்த் துணர்ந்து |