| எச்சவும்மையால் விரதநோற்றல் தெய்வம் போற்றல் தீர்த்தமாடுதல் முதலியன கொள்ளப்பட்டன. வாய்ப்பிலாதமை ஈண்டுப் பெயராய் நின்றது. இரலையின் யானும் எனவியையும். ஓடுமிரலையின் அடுத்தடுத் தலமருகாலை யென முடிக்க. ஊரூர் என்பது முதல் மணப்பவும் என்னுமளவும் ஒரு முடிபு. (177 - 180) ஊர் ஊர் வைகிய சீர்கெழு மாந்தருள் உண்டி கலவி உறுதொழில் முதலா மண்டிய பகுப்பின் வரையறைப்படாது வேறுவே றுயிர்க்கும் வெம்பிணியாளரும் - ஊர்கடோறு முறைகின்ற சிறப்புமிக்க மானுடத் தொகுதியுள் உணவும் மாதர் போகமும் செய்தொழிலு மிவை முதலாகிய பல நுகர்ச்சிகளில் மிக்குச்சென்ற பகுப்பினிடத்தே அவை யித்துணையென அளவிடுதற்கமையாமல் வேறு வேறாகப் பயந்த கொடிய நோயாளரும், உணவு முதலியவற்றின் மிக்குச் சேறலாவது குணவொப்புமையும் செயல்களொப்புமையும் தத்தநிலை பிறழுதல். பகுப்பின் வரையறைப் படாமையாவது உண்டி முதலியனவும் அவற்றினளவும் கால முதலியனவும் நோக்காமை. அங்ஙனம் பிறழ்தலானும் நோக்காமையானும் வளி முதலான முப்பகுதியும் துன்பஞ்செய்யுமென்பதாம். இவையெல்லாம் மருத்து நூலிற் காண்க. இந் நோய்கள் தம்மால் வருவன. (181) கருவி போழ்ந்த பெரும்புண் ணுறுநரும் - ஆயுதங்களின் ஊற்றத்தினால் பெரிய இரணமுற்றவரும், (182 - 183) குட்டம் பெருநோய் முட்டிய வாதம் முயலக னாதி மொய்ப்பிணி யுழவரும் - தொழுநோயும் பெருநோயும் தொழில்களை யிடைப்படுத்தும் வாதநோயும் முயலகனென்னும் குமரகண்ட வலியும் இவை முதலிய நோயுழக்கின்றவரும், இவை தெய்வத்தான் வருவன. (184) பாப்புக்கோ ளாதி பலவகைக் கடிஞரும் - பாம்பு முதலிய நஞ்சுடையவற்றால் கடியுண்ட பலதிறத்தினரும், கோள் செய்வனவற்றைக் கோள் என்ற தாகுபெயர். (185- 186) பேய்கோட் படுநரும் பித்துமீக் கூர்நரும் உறுப்புக் குறைநரும் ஒண்குண மிழநரும் - பேய் பிடிக்கப் பட்டாரும் பித்து மேற்பட்டாரும் யாக்கையினங்கங்கள் குறைந்தாரும் நற்குண மிழந்தாரும், இவை பிற வுயிர்களால் வருவன. (187) இன்னபல் திறத்து எனைவரும் - இவ்வாற்றாற் பல வகையினரான எத்தன்மையரும், |