| ஒருப்பட் டெழலும் துன்னிய விழுமநோய் தன்னம் நீங்க - தமக்குத் தமக்குக் கூடினவாற்றான் உடன் கொண்டுசெல்லா நின்றவோசை திக்குகளை நடுக்குகின்ற மிக்க சனக்கூட்டங்களைக் காணுந்தோறும் காணுந்தோறும் மிக்க களிப்புறுகின்றேனாகி, அக் கூட்டங்களுடன் கூடிச் சென்று சேர்தற்கு மன வொருமையுற்று எழுந்தவளவின் என்னைத் தொடர்ந்துள்ள துன்பநோய் சிறிது ஒழிதலான், ஆகி : குறிப்பு முற்றெச்சம். விழுமம் என்பது ஈறு குறைந்து நின்றது. சிறிதென்பது காற் கூறாம். மேலே யிரு கூற்றொரு கூறு விலங்க என்பவாகலான். எழுந்து திரள் முதலியவற்றைத் தழுவினர்போதும் கனப்பெருக்கம் காண்தொறும் களியேனாகிக் கூடிச் சென்றிறுப்பான் எழலும் நோய் தன்னம் நீங்க என முடிக்க. உறுதுயர் என்பது முதல் ஈர்த்தலினென்னுமளவும் ஒரு முடிபு. (205) உறுதுயர் யாக்கை சிறிது வலி யெய்த - மிக்க துன்பத்தை யெய்திய உடம்பு சிறிது நோன்மையைப் பொருந்த, (206 - 208) ஒய்யெனக் கிளர்ந்த உவகை நெஞ்சத்துப்படர்பே ரூக்கம் பிடர் பிடித்துந்த எழுந்தனன் இம்மென - விரைந்து தலைக்கொண்ட களிப்பு உள்ளத்தின்கண் சென்று புக்கதால் மிக்க மனவெழுச்சி பின்புறம் பற்றித் தள்ளா நிற்ப இம்மென் றெழுந்து, இது விரைவுக் குறிப்பு (207) ஏகுதல் தொடங்கி அடிபெயர்த் தோறும் அஞர்ப்பிணி நழுவ - போதலை முன்னிட்டு அடிபெயர்க்குந் தோறும் நோய்த் துன்பம் இருந்தவிடம் விட்டுப் பெயர, (208 - 213) உவரி நீரின் தவஎழும் மகிழ்வால் அவன் மிசை பாடாஅ அனைத்தும் நெறியாகச் சென்றனன் அடுத்து மன்றல் நகர் நுழைதலும் வெருவும் நோய் இருகூற்று ஒருகூறு விலங்க - கடல்நீரினும் மிக மேலெழுகின்ற பெருங்களிப்பால் அவ்விறைவன் பேரால் தோத்திரம் பாடிக்கொண்டு எந்நெறியும் செந்நெறியாக நடந்தகன்று நெருங்கித் திருமணம் நீங்காத நகரினிடத்தே புகுந்த அளவில் அச்சுறுத்தின நோய் தனது இரு கூறுகளுள் ஒருகூறு விட்டு நீங்கினதால், பிள்ளையார் இளைய நாச்சியாரைக் குறிச்சியின்கண் வதுவை செய்து கொண்ட அக்கோலத்துடனே தேவியொடு புக்கிருந்தருளிய திருப்பதியாகலான் தணிகைக்குச் சீபூரணநகர மென்றொரு பெயருள்ளது. இதனான் மன்றல் நகரென்றார். இவ்வரலாற்றை அத்தலபுராணத்துட் காண்க. அன்றி மன்றல் விழவுச் சிறப்புகள் நீங்காத நகரெனினுமாம். (214) காட்சி ஆர்வம் கையிகந்து ஈர்த்தலின் - பிள்ளையாரைக் கண்டு வணங்கவேண்டு மென்னும் அன்பு தன்னெல்லை கடந்து ஈர்ப்பதுபற்றி, |