| யாக்கை வலியெய்த ஊக்கம் உந்த எழுந்து அடிபெயர்த்தோறும் பிணிநழுவ மகிழ்வாற் பாடிச் சென்று நகர் நுழைதலும் நோய் ஒருகூறு விலங்கக் காட்சியார்வ மீர்த்தலின் என முடிக்க. நறுமண மென்பது முதல் தொழுது என்னுமளவும் ஒரு முடிபு. (215 - 222) நறுமணங்கமழும் நந்திநதி குடையாது எழு முனிவரர் தம் எழுசுனை ஆடாது அலைமலைப் பகைஞன் அருட்கயம் படியாது நாகவண்சுனை நன்புனல் தோயாது விண்டு தீர்த்தம் மேவரக் குளியாது அலரவனி ருஞ்சுனை அழிபுனல் மூழ்காது எத்துயர்த் திரளும் அத்தினத்து அகற்றும் சரவணப் பொய்கை தடம்புனல் துளைந்து - (மலர்களின்) இனிய மணம் வீசுகின்ற நந்தியாற்றின் மூழ்காமலும் எழு முனிவரது எழுசுனை நீரிற் குளியாமலும் அலைந்த மலைகட்குப் பகைஞனான இந்திரனது (அருளைப்பயக்குந்) தீர்த்தத்தின் முழுகாமலும் நாகரது பெரிய சுனையின்கண் நன்மை தரும் நீரிற் படியாமலும் திருமாலது தீர்த்தத்தில் இச்சித்தவை பெறுமாறு முழுகாமலும் பிரமனது பெரிய சுனையின் மிக்க நீரிற் குளியாமலும் எவ்வகைப்பட்ட துயரமுற்றும் மூழ்கின அத்தினத்தினே தீர்த்திடத்தக்க சரவணமெனப் பெயர் பெற்ற தடாகத்தின் தெய்வத்தகைமை மிக்கதான நீரின் மூழ்கி, இவை மேற்கூறிய நந்திதேவர் முதலிய அவ்வவரும் முன்னை நாட்கண் நிருமித்து மூழ்கிப் பிள்ளையாரை வழிபட்டு வரம் பெற்ற தீர்த்தங்களாம். அவை யெல்லாவற்றினும் வேறு வேறு மூழ்கிக் கடைமுறையிற் சரவணத்தின் மூழ்குதல் வேண்டின் கால நீட்டித்துக் காட்சிப் பேறெய்தல் தாழ்க்குமாகலான் அவற்றின் மூழ்காதென்றும், சரவண தீர்த்தமொன்றே மூழ்கினர்க்கு எத்துயரங்களையும் மூழ்கின உடனே நீக்குமென்பது ஒருதலை யாகலின் அந்நீரொன்றினே மூழ்கி யென்றுங் கூறினர். (223 - 226) மென்மெலக் குன்றம் மீமிசை யிவர்ந்து காலை நண்பகல் மாலை முப்போதும் வைகல் வைகல் மலர் மூன்று தெரிக்கும் நீலப் பைஞ்சுனை நேர்கண்டு தொழுது - பையப் பையத் திருமலைச் சிகரத்தின்கண் சென்று வைகறை உச்சி மாலையாகிய மூன்று போழ்தினும் நாடோறும் மூன்று மலர்கள் பூவா நின்ற நீலோற்பலம் நிலைபெற்றுள்ள பசுமைத்தான சுனையை யெதிரிற் கண்டு வணங்கி, நோயுடைமை பற்றி மென்மெல என்றது. அம் மலர் இந்திரன் பிள்ளையாரைப் பூசித்தற் பொருட்டு முன்னோருகத்தில் வைத்தது. இதனானே அத்திருமலைக்கு உற்பலப்பருப்பதமெனவொரு பெயருமுள்ளது. குடையாது ஆடாது படியாது தோயாது குளியாது முழுகாது துளைந்து இவர்ந்து நேர்கண்டு தொழுது என முடிக்க. புரண்டனர் என்பது முதல் நுழைந்து என்னுமளவும் ஒரு முடிபு. |