பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1563

(227 - 228) புரண்டனர் சூழும் பொற்பினர் மிடைதலின் அடியிடப் படாஅ ஆரிடை வீதி - யாக்கை நிலத்தின்கண் படியுமாறு புரண்டு வலம் வருகின்ற பொலிவையுடையார் எல்லா இடங்களிலும் நெருங்குதலான் ஏனையோர் கால்வைத்தற்கியலாத அரிய இடத்தையுடைய திருவீதியினிடத்தே,

அருமையென்னும் பண்பு விகுதியொடு நடு நின்ற வுகரமு நீங்கி முதல் நீண்டது. அருமை இன்மை குறித்தது. இடையரிது என விகுதி பிரித்துக்
கூட்டினுமமையும்.

(229 - 232) ஒதுங்குபு பைப்பைய ஒருமுறை சூழ்ந்து தூவும் எண் நிலத்து தோயாது வெறுத்த தேவர்கள் குழுவும் தேயத் தொழுதியும் தடைஇய வாயல் தடையாது நுழைந்து மெல்லமெல்ல ஒதுங்கிப் பெயர்ந்து ஒருமுறை வலம் வந்து தூவின எள் நிலத்தே வீழாமை (நெருக்குற்ற மக்கட் பெருக்கத்தால்) வெறுத்த தேவர் கூட்டமும் தேயத்தார் கூட்டமும் உள்ளே புகப்பெறாமல் தகைவுற்ற திருவாய்தலுள் தடை படாமல் நுழைந்து,

ஆரிடைபற்றி ஒருமுறை சூழ்ந்தென்றார். எனவே அஃதும் மிகுந்த வருத்தத்துடன் முயன்று சூழ்ந்தவா றாயிற்று. இது குறிப்பெச்சம் தேயம் : ஆகுபெயர். வீதியில் சூழ்ந்து நுழைந்தென்க. பொற்பினர் மிடைதலின் ஒதுங்குபு சூழ்ந்து வாய்தல் நுழைந்தென முடிக்க.

ஆங்கு என்பது முதல் துவன்ற என்னு மளவும் ஒரு முடிபு.

(233 - 238) ஆங்கு ஒருவர் மெய்மணிப்பூண் ஒருவர் மெய் வடுச்செய நெருங்கிச் சென்று நித்தில வாணகை வள்ளி நாயகி மணத்தினை முடித்த கள்ள வேழக் கடவுளைப் பணியா வீரர் ஒன்பதின்மர் வார் கழல் தாழ்ந்து மற்று ஆவயின் வதியும் அமரரைத் தொழுது - ஆண்டு ஒருவரது மெய்யின் கண்ணவாகிய மணியணிகள் ஒருவரது மெய்யிற் றாக்கி வடுச்செய்யாநிற்ப நெருக்குண் டுள்ளே புகுந்து முத்துக்களை யொத்த ஒள்ளிய பற்களையுள்ள இளைய நாச்சியாரது திருமணத்தை முற்றுவித்த கள்ள விநாயகமூர்த்தியை (முதற்கண்) பணிந்து பின்னர் வீரவாகுதேவர் முதலிய ஒன்பதின்மரையும் கழல் கட்டிய பாதங்களில் வணங்கி ஆண்டாண்டு வீற்றுறைகின்ற ஏனைப் பரிவார தெய்வதங்களையும் அம்முறையே போற்றி,

கழல் : ஆகுபெயர். மற்று : அசை. கள்ள வேழக்கடவு ளென்பது கடவுள் வாழ்த்துக் கூறிய வெண்பாவுரையிற் சுருங்கவுரைத்துப் போந்தது. அவ்வரலாற்றைத் தலபுராணத்துட் காண்க.

(239 - 243) பூதப் பகுப்பும் பூத காரணமும் இந்தியக் கூட்டம் இரண்டும் முக்குணமும் நந்தும் ஆங்காரமும் நலத்தகு கரணமும் இறுவாய் மாயை எழுவாய் ஏழும் சுற்ற மென்னத் தோன்றிய ஐந்தும் - ஐவகையாகிய பூதங்களும் அவற்றிற்கு ஏதுவான தன்மாத்திரையும் ஞானம் கன்மமென இருதொகுதியாகிய பொறிகளும் மூன்றாகிய குணங்களும் யான் எனதென் றெழு முனைப்புக்களும் நன்மைக்குத் தக்க மனமும் இறுதியாக மாயை முதலாகத் தோற்றா நின்ற இவ்வேழுள்ளும் மாயையின் கிளையென்று தோன்றிய ஆணவம்மாயை கன்மம் மாயேயம் திரோதை யென
ஐந்துள்ளும்,