பக்கம் எண் :

1564தணிகைப் புராணம்

நலத்தகு என்பது வலிந்து நின்றது. ஏழாவது தொக்கு நின்றது.

(244 - 251) விராய் நின்று இயக்கிய மராது நின்று ஒளிரும் ஆரா இன்ப அருள்நிலை அம்ம தீரா மலப்பிணி தீர்த்து அருள் கொழிப்ப அருள் திருவுருவு கொண்டு அவிர்மணித் தவிசின் ஞான சத்தியும் கிரியா சத்தியும் வானவர் கோமான் வளம்பயில் மகளும் கானவர் நலம்கூர் கன்னியும் என்ன இரண்டு பாலும் இருந்தனர் களிப்ப - கலந்து நின்று காரியப்படுத்தி அவற்றொடு மருவாமனின்று விளங்குகின்ற தேக்காத பேரின்பக் காரணமான திருவருளே தனதிடனாகப் பிறிதொன்றானும் நீக்கற் பாலதன்றாய பண்டை மலப்பிணிப்பைக் கட்ட விழ்த்துக் கருணையிரதம் பெருக அத் திருவருளே தனது திருமேனியாகச் சகளீ கரித்து ஒளிர்கின்ற மணிகுயின்ற தவிசின்கண் ஞானக் கிரியைகளாகிய சத்திகளிருவரும் முறையே தேவர் அரையனான இந்திரனுக்குப் பெருமை தங்கிய மகளெனவும் வேட்டுவர் மன்னனுக்கு நன்மை கூர்ந்த மகளெனவும் அவதரித்துப் பிள்ளையார திருமருங்கினும் வீற்றிருந்து மகிழ்சிறப்பவும்,

மருவாது என்பது மராது என விகாரமாயிற்று. அம்ம என்பது ஈண்டுக் கேட்டி என்னும் பொருளது.

(252 - 257) கண்டமெய் அடியர் கலவினர் போற்ற காணா விண்ணவர் கலவாது ஏத்த கண்கடை ஒழுகும் கருணை நோக்கமோடு இனிது வீற்றிருக்கும் எழில்நேர் காண்டலும் எஞ்சும் நோய் துவர இரியல் போக விஞ்சுநாற் பொருளும் மேவந்து துவன்ற - (அன்ன திருவோலக்கத்தினைக்) காணப்பெற்ற மெய்யுணர்வுள்ள அடியர் கலப்புற்றவரா யிறைஞ்சவும் காணப்படாத விண்ணுலகத்தார் கலப்புறாது நின்றேத்தவும் கடைக் கண்ணிடத்தே யிடையறாது வாராநின்ற கருணைச் செவ்வி உடன் நிகழ உயிர்கட்கு இன்பம் தோன்றும் நிலைமையின் வீற்றிருந்தருள்கின்ற காட்சியை எதிருறச் சேவை செய்த அளவினே நீங்காது மிகையாய் நின்ற நோய் முற்றும் நீங்கினவாற்றால் பிறவற்றுண் மேம்பட்ட நால்வகைப் பொருளும் தாமே வந்து நிரம்புதலும்,

மெய்:- ஆகுபெயர். அடிமை சுதந்திரமின்மை. மேவந்து என்பது மேவரல் என்னும் வினைப்பெயரடியாகப் பிறந்து அது போல ஒரு சொல்லாய் நின்றது. சென்று பணிந்து தாழ்ந்து தொழுது எழும் ஐந்தும் விராயியக்கி ஒளிரும் அருணிலை பிணி தீர்த்தருள் கொழிப்ப இருந்தனர் களிப்ப போற்ற ஏத்த நோக்கமொடு வீற்றிருக்கும் எழில் காண்டலும் நோயிரியல் போக நாற்பொருளுந் துவன்ற என
முடிக்க.