பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1565

ஆற்றாக் கடுந்துயர் என்பது முதல் திருமுன்னிற்ப என்னு மளவும் ஒரு முடிபு.

(258 - 262) ஆற்றாக் கடுந்துயர் அரு நரகு உழப்பவர் நோற்றமுன் ஊழ்நனி நூக்கலும் நொடிப்பின் ஆயிடைநின்று மாயிருந் துறக்கம் புக்குழி பொலிவித்து ஒக்க தோற்றத்து விம்மித மகிழ்ச்சி மெய்தவ வீக்க - தணிக்கப்படாத பெருந்துயராகிய கடத்தற்கரிய நரகத்துட் டுன்புற்றோர் தாம்செய்துள்ள முன்னைய நல்லூழ் (முறை பிறழாது) பின்வந்து கைதரலும் நொடித்தலளவைத் தானதொரு சிறுவரையினே அந்நரகினின்று நீங்கி மிகப் பெரிய துறக்கத்தின்கண் புகுந்தக்கால் பொலிவித்தாற் போன்ற வண்ணமே அதிசய வழித்தான கிளர்ச்சி மெய்ப்பாடுற மீக்கூர்தலான்,

ஆற்றாத என்பது ஈறுகுறைந்து நின்றது. நரகுழப்பதற்கு முன் ஊற்றாகாமல் அதனிலுழந்த வரையிறுதியின்கண் தற்செய்தான் அடியில் தீயவை முன்னும் நல்லவை பின்னுமாகச் செய்த முறை பிறழாது வந்துதவியவாற்றால் முன்னூழ் நனிநூக்க வென்றார். நொடிப்பு என்பது நொடிக்குங் காலம். அஃது ஒரு மாத்திரையளவாம். மாயிருந் துறக்கம் என்பது மரூஉ. தவ என்பது ஈண்டெச்ச வினையாய் நின்றது.

(263 - 266) ஒரு கதி விட்டு மற்று ஒரு கதி அடைந்தவர் மயங்கு அறிவென்ன உயங்கும் முன் உயங்கல் எய்யே னாகி இறுமாப்பு எய்தி செய்முறை தெரியாது திருமுன் நிற்ப - நால்வகைப் பிறப்பினுள் ஒன்றினையடைந்து அதனை நீங்கிப் பிறிதொரு கதியை யடைந்தோரது மயக்குற்ற அறிவையொப்ப முன்னர் நோய் முதலிய பீழை வயத்தானே வருந்தின அம் மயக்கத்தினை இந்நிலைக்கண்ணே அறியேனாகி யிறுமாந்து (இன்னது செய்வலெனச்) செய்யுங்கடப்பாட்டினை யறியாது பிள்ளையாரது திருமுன்னர் நிற்ப,

கதி நான்கு தேவர் மக்கள் விலங்கு நரகர் என்பன. இறுமாப்பெய்தி என்பது ஒரு சொல்லாயது. புக்குழி பொலிவித் தொக்க என்பது பிறவித் துன்பங்க ளொழிந்தமைக்கும், மயங்கறி வென்ன என்பது உயிர் தன்னறிவு மறைப்புண்டமையால் தான் பழைய பயிற்சிவயத்தானே தொடர்ந்து நின்று செய்த வினையாற் செலுத்தப்பட்டதான கதிக்கண் சென்று வேறுபட்டமைக்கும் உவமங்களாயின. ஆகவே அவ்வேறுபாடு தன்பால் அறத்தொலைந்த தென்றவாறாயிற்று. முன்னுயங்க லெய்யாமை ஆன்மா மாயை காரணமாக வருகின்ற ஆணவ முதலிய குற்றந் தீர்தலாம். செய்முறை தெரியாமை தன்னறிவு மறைப்புண்டு ஆன்மா பிறப்பிற்கு வித்தினைத் தேடிக்கொள்ளு முயற்சியைக் கைவிட்டமையாம். திருமுன்னிற்றல் அப் பரம் பொருளை யிடைவிடாது பாவித் தசைவற நிற்றலாம். மகிழ்ச்சி வீக்க முன்னுயங்கல் எய்யேனாகி யிறுமாப் பெய்தித் தெரியாது திருமுன்னிற்பவென முடிக்க.

(267 - 273) இருமைப் பயனும் எளிதினுற் றளிக்கும் திருநீறும் திருவுருப் பூச்சும் நன்கு அளித்திட்டு என்னை தன்வசம்