| ஆக்கிய உலகை என் வசம் ஆக்கி என்றும் ஓர் இயல்பின் நின்ற தன் நிலையில் நீங்கா திருத்தி விடாதுவிட் டருள மெய் அருள் மேற்கொண்டு ஒழியா தொழிந்து வழி வருகின்றனன் - இம்மை மறுமைப் பயன்களை வேண்டியவாறு பொருந்தி நின்று தருவதாய திருநீறும் திருவுருவிற் பூசுதற்கமைந்த சந்தனத் தேய்வையும் நலனுறத் தந்தருளி முன் தன்வயத்தே என்னை அகப்படுத்தின வுலகினை இதுபோழ்து என்வயத்தாகப் பண்ணி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய் நிலைபெற்றதமது நிலையின்கண் நீக்கமுறாமேயிருக்கவைத்துப் பிரியா விடை தந்தருளியவாற்றால் அம்மெய்யுணர்விற்கு நிமித்தமான அருளைக் கவயமாக மேற்கொண்டு நீங்காமனீங்கி இந்நெறிக்கண் வருகின்றேனாக, உலகை என்வசமாக்கினவாறு இறைவன் இந்திரிய விலக்கணங்களை இதுகாறுங் காட்டி நின்ற தன்மை. இனி நமது அன்றென்று நீங்கித் தற்சொருபத்தினைக் கண்டு நிற்குமாறு உயிருக்குப் பேரருள் புரிந்து அனைத்துந் தன்வயமாக அவற்றை முற்றுங் கடந்து நின்ற தன்னையுமறிவித்து ஆராய்ச்சிக்கும் எட்டாத பண்டைக்காலத்தேயான அவிச்சையி னின்றும் ஒழிவித்த வியல்பாம். ஞான நாடகம் நவிலிய மாறலும் என்றதற்கேற்ப மெய்யருளென்றார். விடாது விட்டருள எனலும் ஒழியா தொழிந்தெனலும் கூறியவாறு. ஆண்டான் அடிமைக்கு இயல்பெனல் புலப்படுத்தியபடி. இருமைப் பயனுமளிக்கும் திருநீறும் பூச்சுமளித்திட்டு உலகை என்வயமாக்கித் தன்னிலையிலிருத்தி விட்டருள அருள்கொண்டு ஒழியாது ஒழிந்து வருகின்றனன் என முடிக்க. (274 - 275) அத்தகு பெருமான் அருள்விளையாடலை சற்றிது கேள்மதி தவமேம் படுந - அத்தன்மையவான பிள்ளையாரது அருட்கிடனாகிய திருவிளையாடல்களை (யான்கூறச்) சற்றே கேட்டி தவத்தால் மேம்படுகின்றோய், இனித் தானுய்ந்தவாறு இரவலனுமுய்ந்து வாழ்தல் திண்ண மாகலான் மேம்படுந என உயர்த்துக் கூறியது. பிள்ளையார் அருளால் ஆன்மாவை யுணர்ந்த தமது சந்நிதி மாத்திரத்தால் உலகம் சீவித்தொடுங்கின வாற்றினை யறியும் அறிவு உதித்த தென்பதாம். அப்பெருமானருள் விளையாடலைத் தவமேம்படுந கேண்மதி என முடிக்க. விச்சு என்பது முதல் பெற்றியன் என்னுமளவும் ஒரு முடிபு. (276) விச்சு ஒன்று இன்றி விளைவு மிக்கு ஆக்கியும் - வித்து ஒன்றுமில்லா திருக்கவும் விளையுள் மிகுதியாயுள வாக்கியும், இஃது அருவமாகிய மாயையினின்றும் உலகமெல்லாம் தோற்றுவித்தது. |