பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1567

ஆன்மா ஊழ்வகையான் போகங்களை யெல்லாமநுபவித்தற் கிருந்தும் உவர்ப்பாக அவை முற்றுந்தன்னைத் தொடராவண்ணம் புணர்த்தது.

(278)ஒளிதலை வளர்ப்ப ஒளிகளைத் தணித்தும்-பேரறிவினை உயிர்கண்மாட்டு வளர்விப்பதற்கு அவைக்குரிய உலகைப் பற்றிய சிற்றறிவுகளைக்
குறைத்தும்,

ஒளி ; ஆகுபெயர். இது பாச ஞானத்தினை நன்குணர்ந்து நீக்கின பசு ஞானத்தையும் நீக்கிப் பதி ஞானம் ஒன்றினையே வளர்வித்தல்.

(279)அழுக்கினைக் கழுவ அழுக்கினை ஏற்றியும் - அவ்வுயிர்களது மலமாசினைப் போக்குதற்கு மலமாசினைப் பின்னுமேற்றியும்,

இஃது ஆணவமலமாகிய அழுக்கினை மாயாமலமாகிய அழுக்கை யேற்றித் தொலைத்தல். உதாரணம் : சிவஞானசித்தியார், 6 பக்கம் 2 ஆவது சூத்திரம் 52 ஆவது திருவிருத்தம்: எழுமுடல் கரண மாதி யிவை மல மலம லத்தாற், கழுவுவனென்றுசொன்ன காரண மென்னையெனிற், செழுநவை யறுவை சாணி யுவர்செறி வித்த ழுக்கை, முழுவதுங் கழிப்பன் மாயை கொடுமல மொழிப்பன் முன்னோன்.

(280) உறுந் தொழிலாளர்க்கு உறாது சேண் அகன்றும்-தம்மையடைதற்கு இடைவிடாது முயலும் வினைஞர்களிடத்தே அவரடையப் பெறாவண்ணம் சேணிடை நீங்கியும்,

இது வேதங்களும் நான்முகன் முதலானோரும் துதித்தும் பூசித்தும் பலவாற்றாற் பன்னாள்காறுந் தேடியும் அவைக்கு மவர்க்கும் எளிதினணிய ராகாமல் அப்பாலைக் கப்பாலா யகன்று நிற்றல்.

(281) வறுந்தொழி லாளர்க்கு வந்து உடன் கலந்தும்-அவ்வாறு முயலாத வறிய வினைஞர்க ளிடத்தே காலம் பாணியாம லடுத்துக் கலந்தும்,

இஃது அத்துணை வலியரல்லராய எளிய அன்பர்க்குத் தாம் நினைந்த வடிவொடு சென்று அவருள்ளத்தின்க ணிற்றல்.

(282)விதித்த நல் விதிகளை விலக்கென உவர்த்தும் - விதிக்கப்பட்ட நல்ல விதிகளை விலக்காமென வெறுத்தும்,இது தக்கன் செய்த யாகம் தீமையாயினது முதலிய, வெறுத்தல் -கடைப்படுத்தல்.

(283)விலக்கினை விதியென மேதக நயந்தும் - விலக்குகளை விதித்தனவாமெனச் சிறப்புற நயந்தும்,

இது தண்டியடிகள் தந்தையைப் பேணாமையை நயத்தல் முதலிய. நயத்தல் - தலைப்படுத்தல், இவைக் குதாரணம் - சிவஞானசித்தியார் 6 பக்கம் 2 ஆவது சூ. 29 ஆவது திருவிருத்தம் ; அரனடிக் கன்பர்செய்யும் பாவமு மறம தாகும், பரனடிக் கன்பிலாதார் புண்ணியம் பாவ மாகும், வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி, நரரினிற் பாலன் செய்த பாவமும் நன்மை யாய்த்தே.