பக்கம் எண் :

1568தணிகைப் புராணம்

(284 - 285) இத்தகு தொழின்மை நித்தலும் இயற்றி பொற்ற பேரின்பு அருள் பெற்றியன் - இன்ன வகைப்பட்ட செய்கைத் திறங்களை எக்காலும் செய்யாநின்று நித்தமான வீடுபேற்றை நல்காநின்ற நோன்மையர்,

இத்தகு தொழின்மையாவன ஒன்றினைச் செய்கை செய்யா தொழிகை வேறொன்று செய்கை முதலியன. ஆக்கியும் ஒழித்தும் தணித்தும் ஏற்றியும் அகன்றும் கலந்தும் உவர்த்தும் நயந்தும் தொழின்மை இயற்றி இன்பருள் பெற்றியன் என முடிக்க.

அஃதான்று - அதுவன்றி,

இருமுதுகுரவர் என்பது முதல் காட்டுவன் என்னுமளவும் ஒரு முடிபு,

(286-287) இருமுது குரவர் எழுவாய்ச் சுற்றமொடு துயர் இலங்கு உலகம் தோற்றுதல் பொருட்டு - இறைவனு மிறைவியுமாகிய அநாதியான இருவர் முதலான சுற்றத்துடனே கன்மம் பயில்கின்ற வுலகங்களைப் படைத்தற்பொருட்டு,

இருமுது குரவராவார் சுத்தசிவமும் சிற்சத்தியும்,

(288-289) தந்தை என்ன ஐந்து முகனாகியும் அன்னை என்ன மனோன்மனியாகியும் - தமக்குத் தந்தையும் தாயும் என்னும்படி ஐம்முகமுள்ள சதாசிவமூர்த்தியும் மனோன்மனியுமாகியும்,

(290-292) முன்முறை தந்தையர் தாயர் என்ன நாதம் சிவமே நலத்தகு விந்து மேதகு சத்தி வேறுவே றாகியும் - முதற்கட்கூறிய இறைவனும் இறைவியும் போல நாதமே சிவமும் நன்மையுள்ள விந்துவே மேன்மைத்தான சத்தியுமென வேறுவே றாகியும்,

(293-294) பின்முறை தந்தையர் தாயர் என்ன மகேசன் உருத்திரன் மகேசை உமை ஆகியும் - பின்னர் கூறிய ஐம்முகனு மனோன்மனியும் போல மகேசனு மகேசையும் உருத்திரனு முமையுமாகியும்,

(295) தமையன் என்ன தந்திமுகன் ஆகியும்-மூத்தோ னென்னும்படி யானைமுக மூர்த்தியாகியும்,

(296-298) தனைய னென்ன தாமரை மருட்டும் மூவிரு முகமும் முந்நான்கு கரமும் மருவி வீற்றிருக்கும் ஒருதா னாகியும் -சேயனென்னும்படி தாமரைப்பூவை மருட்டாநின்ற ஆறு திருமுகமும் பன்னிரு நெடுங்கரமுங் கொண்டு வீற்றிரா நின்ற ஒப்பற்ற தாமேயாகியும்,