| (299-302) கடப்படும் இரண்டு கைகோள் இயங்க நானவார் குழல் நகையிழை யானையைக் கானவர் அரும்பெறல் காமரு மாதினைக் கற்பினில் களவினில் பொற்புற மணந்தும் - தமது கடமைப்பாடான இருவகை ஒழுக்கங்களும் நடக்குமாறு நானங்கமழ நீண்ட கூந்தலையும் ஒளியுள்ள அணிகளையுமுடைய தெய்வயானை நாயகியையும் வேடர்களது பெறுதற்கரிய அழகு தங்கிய வள்ளி நாயகியையும் முறையே கற்பியலினும் களவியலினும் (உயிர்கள் ஞானப்) பொலிவைக் கொள்ளுமாறு வதுவை செய்தும், இரண்டு கைகோளாவன ஞானமும் கிரியையுமாம். முற்றும்மை தொக்கு நின்றது, கற்பியல் தந்தை தாயர் தாமே விரும்பிக் கொடுப்பத் தலைமகனும் தலைமகளும் வதுவைபுனைந் தெய்துவது. களவியல் எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் அத்தலைமகனும் தலைமகளும் எதிர்ப்பட்டுத் தாமே (எண்வகை மணத்துள் ஒன்றாய கந்தருவ மணத்தினராய்ப்) புணர்ந்து வருவது. இவற்றின் விரிவை அகத்திணையியலுட் காண்க. உலகம் தோற்றுதற் பொருட்டு இருமுது குரவருமாகிய முதற் சுற்றமொடு சதாசிவன் சிவம் நாதம் மகேசன் உருத்திரனும் இவர்களுக்குரிய சத்திகளும் தமையனும் தனையனாகிய தாமுமாகி ஞானக்கிரியைக ளியங்கத் தெய்வயானை வள்ளியம்மை யென்னும் பெயருள்ள இரண்டு சத்திகளை மணந்ததென்றவா றாயிற்று, (303-306) பொருட்டுறை முழுதும் புரையின்றி நடப்ப அண்டகோடிகளும் அரைக்கணத்து அளவையின் வறிது நகைதோற்றி இறுவது புரியும் எறுழ்வலி ஆற்றல் எய்யான் போல - எல்லாப் பொருள்களின் பாகுபாடுகளனைத்தும் வழாமல் நடக்குமாறு அரைமாத்திரைப் போழ்தினே ஆயிரகோடி அண்டங்களையும் (இதற்கென வேண்டாது) வறிய நகை புரிதலால் படைத்து இறுதியுறப் பண்ணா நின்ற தமது கழிபேராற்றலுடைமையைத் தாமே யறியார் போல, இயற்கையாய் முற்று முணர்ந்தானை அறியான் போல வென்றது உபசார வழக்கு. பொருட்டுறை என்பது படைத்தல் முதலிய ஐந்தொழிலும். (307-308) மந்திரம் தூது செலவு இகல் மற்றும் ஆற்றி வெஞ்சூர் வலி காற்றி உலகு ஓம்பியும் - அமைச்சொடு ஆராய்தலும் ஒற்றுவிடுத்தலும் பகைவர்மேற் செல்லுதலும் போர் செய்தலும் இவை முதலியவு மியற்றிக் கொடிய சூர்மாவின் வலியை இல்லையாகப் பண்ணி உயிர்களைப் பாதுகாத்தும், காற்றி என்பது கால் என்னும் வினைப்பெய ரடியாய்ப் பிறந்த எச்சம். காற்று என்னும் வளியின் பெயர்க்கும் இதுவே முதனிலையாகும். அன்றியும் இக்கால் என்னு முதனிலைப் பெயரே அதற்கு ஆகுபெயராக நின்று காலென்று வழங்கும். (309-310) எல்லாம் அறிந்து அறிவிக்கும் அவ்வியல்பை கண்கூடாக காட்டுவன் - அனைத்தினையும் தாமேயுணர்ந்து உயிர்களை யுணர்த்தாநின்ற அந்நிலையை வெளிப்படையாகத் தோற்றுவிப்பன், |