பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1571

(319) ஒளிகளின் ஒளியா ஒளிகளூஉங்கு ஒளியன் - ஒளிக ளென்பவை யெல்லாவற்றுள்ளும் பேரொளியாகவும் அவற்றினும் மேம்பட்ட அருளொளியினராய்,

(320) வெளிகளின் வெளியா வெளிகளூஉங்கு வெளியன் - வெளிகளென்பவை யெல்லாவற்றுள்ளும் பெரு வெளியாகவும் அவற்றினும் மேம்பட்ட பர வெளியினராய்,

(321) அளவினின் அளவா அளவினூஉங்கு அளவன் - அளவுகள் என்பவை யெல்லாவற்றுள்ளும் மிக்க அளவாகவும் அவற்றினும் மேம்பட்ட தனியளவினராய்,

அளியன் ஒளியன் வெளியன் அளவன் என்பவை குறிப்பு முற்று எச்சங்கள். அளிகள் தாய்தந்தையர் அரசர் முதலியோர் செய்யுமளிகண் முதலியன. தண்ணளி மழை நிறைமதி முதலியவை செய்வன. மேம்பட்ட தலையளி பிறப் பிறப்புகளின் வேடையைத் தொலைப்பது. ஒளிகள் விளக்கொளி விண்மீன் முதலியவை செய்வன. பேரொளி இருசுடர் முதலியவை செய்வன. மேற்பட்ட அருளொளி அருளுருவாய்த் தோற்றி அவிச்சைத் தொடக்கினைக் கட்டறுப்பது. வெளிகள் கடவெளி முதலியன. பெருவெளி மனவெளி முதலியன. மேற்பட்ட பரவெளி சிதாகாயம். அளவுகள் எண்ணல் எடுத்தல் முதலியன. மிக்க அளவு காட்சி முதலியன. தனியளவு முதல் நடுவீறின்மையாம். மூவகை யுருவாய் உயிர்த்தும் முயங்காப் பொருள் அமைத்தும் படாத பெருந்தகை அமைந்தன நடாவியும் அருந்திறற்றானாய் நின்று காண் தனிமுதல் அளியன் ஒளியன் வெளியன் அளவன் என முடிக்க.

இன்னான் என்பது முதல் அழுத்துவன் என்னுமளவும் ஒரு முடிபு.

(322-323) இன்னான் ஒருவனை முன்னுபு சென்று அவன் பூங்கழல் சேவடி போற்றுதி ஆயின் - இத் தன்மையராகிய ஒருவரைப் பேரன்புடன் சிந்தித்து (ஆண்டுச்) சென்று அம் முதல்வரது பூங்கழலை யணிந்த செய்ய திருவடிகளை வணங்கி வாழ்த்தினையாயின்.

பூங்கழல் என்பது வருமொழி முதற்கு இனம் தோன்றியது. சேவடி போற்றல் வீடுபேற்றிற்குக் காரணம். இதனை முருகாற்றுப் படைக்கண் முதற்படை வீட்டகவலில் "சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு" என்னுந் தொடரிற்குப் பெரிய ருரைத்த வுரையானுய்த் துணர்க.

(324-329) பேர்அஞர் உறுத்த பேதுறு நோயும் காரண நோயும் கையிகந்து இரிய கடைக்கணித் தருளி கரையில் நாற்பொருளும் கொடைக் கடன் நீயிர் குறித்த அளவையின் எண்மடங்கு ஆற்றி என்றும் தீரா அகம்படித் தொழின்மையின் அழுத்துவன் அன்றே - பெருந் துன்பத்துளாழ்த்தின மயக்க மிக்க நோயும் அதனை யுறுத்துதற்குக் காரணமாய் நின்ற நோயும் கைவிட்டோடுமாறு தமது கடைக்கணோக்கம் செய்தருளி எல்லை யில்லாத அறமுதலிய நான்கு பொருள்களையும் நீயிர் (தம்மாட்டுப் பெறத்தக்க) கொடைப் பொருளாகக் கருதிய அளவினும் எண் மடங்கு மிக்கருளி அகம்படித் தொழில் புரியுமாற்றின்கண் நிலையுதலுறுத்துவர்,