| அன்று, ஏ : அசைகள். மேம்படுக கேண்மதி போற்றுதி யென்னும் ஒருமை முன்னிலைப் பெயர் வினைகளுக்கேற்ப நீ குறித்த அளவையினென்னாது நீயிரென்றது நின்னன்னார் என ஒரு குடியுளொருவன் மெய்ந்நிலையை யடையப்பெறின் அவன் முன்னோரும் பின்னோரும் தனது நற்றவம் காரணமாக உய்வு பெறுவரென்பது அருள் வழக்காதலின் பன்மையிற் கூறியவாறு. "ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே" எனப் பெரியர் கூறுமாறு போல எனக்கொள்க. அன்றேல் ஒருமையிற் பன்மை தழுவிய வழுவமைதியுமாம். அகம்படித் தொழின்மையாவது சன்மார்க்கநிலை முதலிய மூன்றிற்கும் மூலமான தாதநெறியாம். இவை முன்னர் ஒருவாறுரைக்கப்பட்டன. இந்நெறி உண்முகச் சரியைநிலை. பேதுறு நோய் ஆகாமிய பிராரத்தங்கள். காரண நோய் சஞ்சிதம். முன்பு சென்று சேவடி போற்றுநர்க்கு கடைக் கணித்து நாற்பொருளு மிக்கருளல் வேண்டுமென்பது கடப்பாடாதலின் கொடைக்கடனென்றார். கடைக்கண் என்னும் சினைப் பெயரிற் பிறந்தது. கடைக்கணித்த லென்னும் வினைப்பெயர் ஈண்டு எச்சமாய் நின்றது. கண்ணல் நுதலல் சுட்டல் எண்ணல் குறித்தல் இவை முதலியன கருதலென்னும் ஒருபொருட்கிளவி. அங்ஙனம் அகம்படித் தொழின்மையி னழுத்துமிறைவர் யாண்டைக் குரியரெனின் இச்சொற்கள் அவாய் நிலையான் வருவித்துரைத்தவாறு. அன்றி இவ்வாறு சொல்லக்கேட்ட அன்பன் கூற்றாக இவ்வினாவை ஆசங்கித்துரைத்த தெனினுமமையும். இன்னானொருவனை முன்பு சென்று போற்றுதியாயின் பேதுறு நோயும் காரணநோயும் இரிய கடைக்கணித்தருளி கொடைக் கடன் ஆற்றி அகம்படித் தொழின்மையின் அழுத்துவன் என முடிக்க. ஆடகமென்பது முதல் கீழ்க்கோட்டம் என்னுமளவும் ஒரு முடிபு. (330-333) ஆடகப் பசும்பொன் பாடகச் சீறடி நாடகம் மகளிர் நவிற்றிய ஆடல் சிலம்பு கிண்கிணி தீங்குழல் முழவம் முரசம் தூரி முழங்கு ஒலியானும் - ஆடகமென்னு முயர் பொன்னினாகிய கால் காப்பை யணிந்த மெல்லிய அடியினராகிய நாடகமாதர் (அரங்கின்கண்) ஆடுகின்ற ஆடலில், சிலம்புகளும் கிண்கிணிகளும் இன்னோசைத் தாய தண்ணுமையும் முரசமும் தூரியுமென இவை இடையறாது முழங்கும் ஒலியினாலும், ஆடகப்பொன் : இரு பெயரொட்டுப் பண்பு. ஆடகம் நால்வகையுள் ஒருவகைப் பொன். பாடகம் : மரூஉமொழி. சிலம்பு என்பதைப் பெயரெச்சமாக்கிக் கிண்கிணிக்கு அடையாக வுரைப்பினுமாம். சிறுமை மென்மை குறித்து நின்றது. (334-337) விண் தலம் உரிஞும் வியன்மணிப் புரிசை கொண்டல் கண்படுக்கும் கோபுர நிரைகள் ஆடுகொடி சுமந்த மாடம் நெடுமாளிகை இன்னன பிறவும் மன்னுதலானும் - விண்ணிடத்தை யுரிஞ்சுகின்ற உயர்ந்த மணிகள் குயின்ற மதில்களும் மேகம் தங்குதற்கிடமான கோபுர நிரைகளும் அசையுங் கொடிகளை மேலே பொறுத்த மேனிலைகளால் நெடிய மாளிகைகளும் இவை போல்வன பிறவும் நிலைபெற்றிருக்கையாலும், |