பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1573

பிறவென்பது மண்டபம் விமானம் நிலைத்தேர் செய்குன்று முதலியவற்றை. புரிசை சூழ்ந்த கோபுர மெனினுமாம்.

(338-341) ஒலிதிரைக் கடலும் ஓங்குபல் வரையும் உடங்கு தொக்கு அன்றி ஒண்துறை யாடி இருபகுப் பினவாய் இருகரை மருங்கும் நோற்றன வதியும் பேற்றினைத் தெரிக்கும் - ஒலித்தெழுந் திரைகளையுள்ள கடலும் மேலுயர்ந்த பன்னிற மலைகளும் ஒன்றாகச் சேர்ந்தெய்தி கடவுட்டன்மை வாய்ந்துள்ள புனிதநீரில் முழுகி இரண்டு பகுப்புக்களாய அப் புனிதநீரி னிருகரைப் புறத்தும் நின்று நோற்கின்றவையாய் நிலைபெற்றிருக்கப்பெற்ற தமது பெரும்பயனைப் புலப்படுத்துகின்ற,

இப் பெயரெச்சம் மேல்வரும் கோட்டமென்பதொடு இயையும் கிண்கிணி முதலியவற்றின் ஓசையை ஒலிகடலாகவும் புரிசை முதலியவற்றின் மிகுதியைப் பல்வரையாகவும் உருவகப் படுத்தினவாறு, ஒலியாற் கடலும் நிறம் தோற்றங்களால் வரையும் உருவகம். பன்னிறமலை யென்றது வெண்மலை பொன்மலை நீலமலை முதலியவற்றை. இவ்வண்ணமுள்ள மலைகளுள்ளன மேருவரைக்கு நாற்புடையினும், தீர்த்தம்-சரவணப் பொய்கை. ஒண்மை-மாசின்மை.

(342-344) மும்மையும் அளிக்கும் மூவா முழுமுதல் ஐம்முகனாகி அமர்ந்த வீரட்டமும் அறுமுகனாகி அமர்ந்த கீழ்க் கோட்டமும்-இம்மை மறுமை வீடு என்னும் முத்திறத் தின்பங்களையும் உயிர்களைப் பெறுவியாநின்ற மூத்தலில்லாத தனி முதலாகிய பிள்ளையார் ஐந்துமுகமுள்ள இறைவனாகி வீற்றிருக்கும் வீரட்டமும் ஆறுமுகமுள்ள கடவுளாகி வீற்றிருக்கும் கீழ்க்கோட்டமும்,

மூவா என்பது மூத்தவென்னு மெச்சவினையின் எதிர்மறைச் சொல்லாய் ஈறுகுறைந்து நின்றது. முழுமுதல் தன்னின் பிறிதொன்றில்லை யென்னும் பொருட்டு. கோட்டம்-கோயில். நாடக மகளிர் ஆடற்கிண்கிணி முதலியவை முழங்கொலியானும் புரிசை முதலியவும் பிறவும் மன்னுதலானும் கடலும் வரையும் தொக்கு அண்மி துறையாடி இருமருங்கும் வதியும் பேற்றினைத் தெரிக்கும் வீரட்டமும் கோட்டமுமென முடிக்க.

பொன்னு மென்பது முதல் பண்ணை ஒருபுறஞ் சூழ என்னு மளவும் ஒரு முடிபு.

(345-347) பொன்னும் மணியும் புதுமலர்க்குவையும் திரைக்கையின் தூஉய் திளைத்து எழுந்து ஒழுகும் நந்தி ஆற்று நறும்புனல் மடுக்கும்-பொன்னையும் மணிகளையும் புதுமைத்தான பூத்திரளையும் அலைகளாகிய