பக்கம் எண் :

1574தணிகைப் புராணம்

கைகளால் எடுத்துத் தூவிக் கலந்து மேலுயர்ந் தொழுகாநின்ற நந்தி நதியின் இனிமைத்தான நீர்ப் பாய்ச்சலால் வளர்ந்த,

நீர்பாய்கின்ற வெனினுமாம், முன்னையது மேல்வரும் கதிர்ச் சாலியொடும் பின்னையது பண்ணையொடு மியையும்.

(348-352) குரங்கு கதிர்ச்சாலியும் கொழுதீம் கரும்பும் குலை பூ கதலியும் கோள் தெங்கினமும் கோள்கள் மீ பரிக்கும் பாளைக் கமுகும் வயின் வயின் பொதுளி வளம்பல உறந்த முருகு அலர் பண்ணை ஒருபுறம் சூழ-கூனிய கதிர் செறிந்த செந்நெல்லும் இனிமைமிக்க கரும்புகளும் தாற்று வாழைகளும் குலைகளால் மிக்க தெங்கின் வகையும் விண்கோள்களைத் தம்மேல் சுமவாநின்ற பாளைகளையுடைய கமுகுகளும் இடங்கடோறும் நிறைந்து பல்வேறு பயன்களை உதவுவதான நறுமணங்கமழும் மருதம் ஒருபுடை தழுவாநிற்ப,

இடங்கள் வயல் சோலை படப்பை முதலியன. இனம் என்பதனைச் சாலி முதலியவற்றிற்குங் கூட்டுக. பொன் முதலியவற்றைத் திரைக்கையால் தூஉய்த் திளைத்து எழுந்து ஒழுகும் நந்தியாற்றுப் புனல் மடுக்கும் சாலியும் கரும்பும் கதலியும் தெங்கும் கமுகும் பொதுளி வளம் பலவுறந்த பண்ணை சூழ என முடிக்க.

அவரை முதல் புறவ மொருபுறஞ் சூழ என்னுமளவும் ஒரு முடிபு.

(353-354) அவரை துவரை அரில்கதிர் வாகு சாமை இறுங்கு ததைந்தன விளையும் கொல்லை - அவரையும் துவரையும் சிறு தூறுகள் போலும் கதிர்களுள்ள வரகும் சாமையும் இறுங்கும் நிரம்பினவாய் விளைதற்கிடமாகிய கொல்லைகளும்,

(355-360) முல்லை கோழிணர் பூவையும் பந்தர் மாதவி உந்திய கோங்கும் பைங்கால் கொன்றை பசும்பொன் சுண்ணமும் வளி உளர்ந்து எடுப்ப மறுபுல வரைப்பும் போர்த்தன கமழ்ந்து பொறி வண்டு அழைக்கும் அரும்புலப் புறவம் ஒருபுறம் சூழ - முல்லைக்கொடிகளும் கொழுவிய பூங்கொத்துக்க ணிறைந்த காயாவும் பந்தர்போற் படரும் குருக்கத்திகளும் மேலெழுந்த கோங்குகளும் பசிய அரையுள்ள கொன்றைகளும் பசுமைத்தான பொன்னிறத்த மகரந்தப்பொடிகளும் இவற்றிற் படிந்து காற்று வீசலால் வேற்றுநில வெல்லையினும் நிறைந்து மணந்து பொறிகளையுடைய வண்டினத்தை வரிக்கா நின்ற வெற்றிடமரிதான முல்லைநிலம் ஒருபுடை தழுவா நிற்ப,

மறுபுல வரைப்பு தனக்கணியவாகிய குறிஞ்சி மருதங்கள். அரும்புலம் காடுபொதுளா வெற்றிட மின்மை. அவரை முதலியவை விளையும் கொல்லையுள்ள புறவமெனவும் முல்லை பூவை முதலியவை யுடைத்தாய் வளியுளர்ந்து எடுப்ப மறுபுல வரைப்புங் கமழ்ந்து வண்டினமழைக்கு மரும்புலப் புறவ மொரு புறம் சூழ என முடிக்க.