பக்கம் எண் :

திருத்தணிகையாற்றுப்படை1577

நகரமும் ஞகரமும் தம்முளொக்கும். கவான்மலை என்பது இலக்கணப் போலி.

(392-400) கதிர்தினை காக்கும் உவாமதி முகத்தார் ஓச்சினர் விடுக்கும் கவணையில் மணியோ கங்குல் கானவர் விலங்கினம் துரக்கும் இலங்கு கூர்கணையோ அலைத்தர விசும்பின் நிலைத்தரு கலன்கள் பல்வகை மின்கொடி ஒல்கி வீழ்ந்து என்ன வெல்வரை நிரையும் பில்குகதிர் மணிபூங் காழும் தாமமும் கவின ததைஇய மண்டபம் மேடை மாடம் மேனிலைகள் - கதிர் விளையுளின் பொருட்டுத் தினைப்பயிரை ஓம்புகின்ற நிறைமதி போலும் முகத்தழகுள்ள குறிஞ்சிநில மகளிர்மே லெறிந்து விடுக்காநின்ற கவணையின் மணிக்கற்களோ? இருள் நிறமுடைய வேட்டுவர் மாவினத்தைப் பற்றுமாறு எய்கின்ற வடித்த முனைகூரிய அம்புகளோ? அலைத்தலால் விண்ணுலகிலுள்ள பலவகை யணிகளும் பலவேறு மின்னுக்கொடிகளும் நிலைபெயர்ந்து வீழ்ந்தாற்போல இருளை யோட்டின மலைகளிடத்தே நிரைத்த கதிரொளியை யுமிழாநின்ற பொலிவுள்ள மணிவடங்களும் பொன்னரி மாலைகளும் அழகுற நெருங்கின மண்டபங்களும் மேடைகளும் மாடங்களும் உபரிகைகளும்,

பல்வகை என்பதை கலன்களுக்குங் கூட்டுக. கலன்களும் மின்னுக்கொடிகளும் கவணை மணிகளாலும் கூர்ங்கணைகளாலும் அலைப்புண்டு வீழ்ந்தாற்போலும் என்றது அவை விண்ணிற் பெயர்தற்குக் காரணந் தோன்ற நின்றது. வீழ்ந்தால் என்பது வீழ்ந்து எனத் திரிந்து நின்றது. வரை என்பதை மூங்கில் என்றுரைத்துக் காழும் தாமமும் மூங்கில் நிரையும் என எண்ணியுரைப்பது மொன்று. முன்னையதில் வரை புடைவரைகள்.

(401-403) இயங்கா நிலைத்தேர் இயங்கும் மணி பஃறேர் விமான வூர்திகளும் வேற்றுமை தோற்றா வளம்பல தழீஇ - இயக்கமில்லாத நிலைத்தேர்களும் இயக்கமுள்ள மணி குயின்ற பல தேர்களும் விமான யானங்களும் தம்முள் வேறுபாடறியப்படாதனவாய்ப் பல வளப்பங்களையு மொருங்குகொண்டு,

தோற்றா என்பது முற்றெச்சம்.

(404-406) எம்மருங்கும் மெய் அடியார் இடும் அகில் தூமமும் எக்கரின் குவைஇய படரொளி யூட்ட பளிதம் குப்பை கான்றதீம் புகையும் கழுமி விண் கெழுமி - எல்லாப் பக்கமும் மெய்யுணர்வுள்ள தொண்டர்களிடுகின்ற அகிற் புகையும் குவாலாகக் கூப்பிய பரந்த ஒளியைத் தம்மிடத்தே யுடைய கப்பூரக்குவைகள் வெளிப்படுத்தின இனிய புகையும் ஒருசேரக் கூடி விண்ணிற் பரந்துலாவி,

(407) இமையார் நாட்டம் இமைப்பன செய்ய-ஆண்டுத் தேவருடைய கண்களை இமைக்கும்படி செய்தலானும்,

(408-410) மல்லல் ஆவண மறுகும் வீதியும் நாள்தொறும் எழிலான் நவம் நவம் ஆகி இமைக்குநர் நாட்டம் இமையாமை செய்ய - பல பண்டங்களு மிருப்பதனால் வளப்ப மிக்க அங்காடி வீதிகளும் மற்றை வீதிகளும் (நிலைபெற்ற) எழிலால் நாள்தோறும் மிக்க புதுமை பயப்பனவாய்க் கண்ணிமைக்கு மனித்தரின் கண்களை இமையாவண்ணம் செய்தலானும்,