பக்கம் எண் :

நைமிசப் படலம்159

நைமிசப் படலம்.

 பூவி ருந்த நான்முகன் பொருக்கெ னக்க டாவீய
 தாவி ருந்த பைம்புனேமி சார்ந்த சைந்த நைமிசம்
 தேவி ருந்த செந்தழற்றி கழ்ந்து விண்ணு ளார்க்கெலாம்
 மாவி ருந்து வைகலும் வழங்கி ருக்கை யாயதே.

(இ - ள்.) தாமரைப் பூவின்கணெழுந்தருளி யிருந்த நான்கு முகத்தையுடைய பிரமன் விரைவாகச் செலுத்திய தாவுதல் பொருந்திய பசிய தருப்பைப் புல்லாகிய சக்கரம் பொருந்தித் தங்கிய நைமிச வனமானது தெய்வத்தன்மை பொருந்திய செவ்வண்ணமாகிய அக்கினியானது விளங்கப்பெற்றுத் தேவருலகத்தின் கண்ணுள்ள தேவர்கட்கெல்லாம் பெரிய விருந்தினைக் கொடுக்கின்ற
இருப்பிடமாயது.

(வி - ம்.) பொருக்கென - விரைவாக. தா - தாவுதல். அடைந்த-தங்கிய. தே - தெய்வத்தன்மை, மாவிருந்து - பெரிய விருந்து. நேமி சம்பந்தம் - நைமிசம்: தத்திதம்.

(1)

 படுப்ப வுய்த்த வான்குலம் பறப்பை கூர்ம மாதியும்
 விடுப்ப வுய்த்த கோணமும் விறந்த நோக்கி நம்மையும்
 அடர்ப்ப வென்றொ ளிப்பபோ லழன்று டற்று தீம்புகை
 இடர்ப்ப டும்வி லங்குபுள்ளு மூர்வ சேணி றக்குமே.

(இ - ள்.) கொல்லக் கொணர்ந்த பசுக்கூட்டங்களும், கருடப்பறவையும், ஆமை முதலியவைகளும் (அசுவமேத யாகமியற்றும் பொருட்டுத் திசைமுகங்கடோறும்) செலுத்த ஆண்டுக் கொண்டுவந்துள்ள குதிரையும் செறிந்தனவற்றை நோக்கி (விலங்கு, பறவை, உணர்வன முதலிய உயிர்கள்) நந்தம்மையும் (இங்ஙனம்) கொல்வார்களென்று கருதி ஒளிப்பனபோல அழற்சியைச் செய்து வருத்துகின்ற இனியை யாகப் புகையால் துன்பினையடைகின்ற விலங்கும், பறவையும், ஊர்வனவுமாகிய உயிர்த்தொகுதிகள் நெடுந்தூரத்திற் செல்லும்.

(வி - ம்.) கருடயாகத்திற்கும், கூர்மயாகத்திற்குங் கொணர்ந்த கருடனும் யாமையுமாகும். பறப்பை - பறவை. "பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்பும்" என்னும் தேவாரத் திருவாக்கானறிக. ஆமையை யாககுண்டத்தின்கீழ்ப் புதைத்தல் மரபாதலின் அதற்குக் கொணர்ந்த எனினுமாம். விடுப்ப வுய்த்தகோணம் - அசுவமேத யாகத்தின் பொருட்டுத் திசைகடோறும் விடுக்க நைமிசத்திற் செலுத்திய குதிரை. விலங்கும் புள்ளும் ஊர்வனவும் சேணிறக்கு மென முடிவுசெய்க.

(2)

 கன்னி யந்து ழாயினான் கமழ்ந்த பங்க யத்தினான்
 மன்ன னாதி தேவர்கண் மகிழ்ந்து முற்று மாண்பினால்
 நன்னர் நைமி சஞ்சிறந்த நாகம் வைகு நாடெலாம்
 கொன்னு மண்வ ரைப்பிடைக் குழீஇக் கலந்த தொத்ததே.