பக்கம் எண் :

நைமிசப் படலம்163

 சாம தக்கினி சற்ச ரன்சயன் சனிப ரந்தபன் சத்தியன்
 தூம பன்சுகன் சத்தி மாண்டவி யன்சு தீக்கண னிரதிதன்
 வாம தேவன்ப ரத்து வாசன்வ சுசாபா லன்காண் டிப்பியன்
 காமர் விண்டுவி ருத்தன் குண்டலன் காசி பன்புகழ் தேவலன்.

(இ - ள்.) சாமதக்கினியும், சற்சரனும், சயனும், சனியும், பரந்தபனும், சத்தியனும், தூமபனும், சுகனும், சத்தியும், மாண்டவியனும், சுதீக்கணனும், இரதிதனும், வாமதேவனும், பரத்துவாசனும், வசுவும், சாபாலனும், காண்டிப்பியனும், யாவரும் விரும்பத்தக்க விண்டுவென்பவனும், விருத்தனும், குண்டலனும், காசிபனும், யாவரும் புகழத்தக்க தேவலனென்பவனும்.

(12)

வேறு

 அசித னாதியர்க ளொன்றி ரண்டுபல வடியி னார்தலையி னார்பலர்
 கசிவி னோடுதவம் வேறு வேறுபுரி காட்சி யாளரிவர் தம்முழைப்
 பசையி னோடுபணி செய்து பீழைதபு பண்பு மிக்கவர்க ளன்னவர்
 வசையி லேவல்புரி வோரு மண்மினர் மகிழ்ந்து வைகலுறு மேல்வையில்.

(இ - ள்.) அசிதனை முதலாகவுடையவர்களுமாகிய முனிவர்கள் ஒருதலையினையும் இரண்டு காலினையு முடையவரும், பல வடியினராய்ப் பல தலையினையுடையவருமாகிய பல முனிவர்கள் அன்பினோடு தவத்தை வெவ்வேறாகச் செய்கின்ற காட்சியினையுடையராவர். இவர்மாட்டு அன்பினோடு தொண்டாற்றிப் பிறவித்துன்பத்தை நீக்குகின்ற குணமிக்க மாணவர்களாய் அப்பெரியாரது குற்றமற்ற ஏவலைக் குறிக்கொண்டாற்றுவோரும் அண்மி யுவகையுற்றுத் தங்கியிருக்கின்ற காலத்து.

(வி - ம்.) ஒன்றிரண்டென்பதனை யடியினோடும் தலையோடும் கூட்டுக. பல அடியோடுகூடிப் பல தலையினாரெனப் பல என்பதனைத் தலையோடும் கூட்டுக. ஒன்றிரண்டென்பதனை மூன்றாக்கி மூன்றுகாலு மொருதலையினையுமுடைய பிருங்கியெனக் கொள்வாரு முளர். கசிவு - அன்பு. பசை - அன்பு. பீழை -
துன்பம்.

(13)

 இரவி செங்கதிர னைத்தும் வாங்கியினி தேய்த்து விட்டனைய வேணியும்
 பரவு வெண்மதிபொ டித்தெ டுத்தனைய பாவ முற்றுமறு பூதியும்
 விரவு முள்ளிருடி ரண்டு ருக்கொடு வெளிக்க தித்தனைய கண்டியும்
 வரமி குத்தபதி னெண்பு ராணமும் வயங்கு சூதனு மடுத்தனன்.

(இ - ள்.) சூரியனது சிவந்த கிரணங்களையெல்லாம் வாங்கி இனிதாக இணைத்துவிட்டா லொத்துள்ள சடையும், ஆகாயத்திற் பரவுகின்ற வெண்மையையுடைய சந்திரனைப் பொடி செய்தெடுத்தாலொத்த பாவமுற்றிலும் போக்குகின்ற விபூதியும் (ஆன்மாவோடு அத்துவிதமாகிக்) கலந்த உள்ளிருளாகிய ஆணவந்திரண்டு வடிவம்கொண்டு வெளியிலே விளங்கினாலொத்த உருத்திராக்கக் கண்டிகையும், மேன்மை பொருந்திய பதினெண் புராணங்களும் விளங்கும் சூதமுனிவனும் ஆண்டுப் பொருந்தினன்.

(14)