பக்கம் எண் :

168தணிகைப் புராணம்

(வி - ம்.) வாங்கி - வளைத்து "வாங்கலே வளைத்தல் கொள்ளல்" என்னும் நிகண்டானறிக. காட்சி - தோற்றம், எழுவாய். உரன் - வலி. தான் - ஈண்டு வெள்ளிமலை.

(3)

 பொன்வ ரைக்குல மணிவரைக் குலம்புவி யிருப்பத்
 தன்வ ரைப்பக லாதிறை தவிர்வரம் படைத்த
 மின்வ ரைச்சுடர் வீக்கந்தன் பொன்மறு வீழ்த்தோர்
 நன்வ ரைப்பலா திறைநய வாமையை நவிற்றும்.

(இ - ள்.) பொன்மயமாகிய மலையினங்களும், இரத்தின மலையினங்களும் இப்பூமியினிடத்திருப்பத் தன்னிடத்தினின்றும் நீங்காது இறைவன் தங்கும் மேன்மையைப் பொருந்திய ஒளியோடு கைலைமலையின் சுடரின் பெருக்கமானது தன்னைப்போல ஆணவமாகிய குற்றத்தை நீக்கினோரிடத்தையல்லாமல் வேறிடத்தை இறைவன் விரும்பாமையைக் காட்டும்.

(வி - ம்.) தன்னென்றது - ஈண்டு வெள்ளிமலையை. தவிர்தல் - தங்குதல். வீக்கம் - பெருக்கம். மறு - குற்றம். வீழ்த்தோர் - ஆணவம் நீங்கிய பெரியோர். தன்வரைப்பு - அவரிடம். நவிற்றும்-காட்டும்.

(4)

 வயக்க மாண்டவெள் ளருவிகள் வயின்வயின் வீழ்தல்
 துயக்க மாணவன் றரக்கனைச் சுடர்விர னுதியால்
 இயக்க மாற்றலு மிருந்தவச் சிலம்பெழு பாக்குத்
 தயக்க மாண்டதன் கரங்களை யூன்றுத றகையும்.

(இ - ள்.) விளக்கம் பொருந்திய வெள்ளிய அருவியின் கூட்டங்கள் இடமிடங்கடோறும் வீழ்தல், வருத்தமிக (கைலைமலையினை எடுத்த) அக்காலத்து இராவணனை ஒளி பொருந்திய பெருவிரனுதியினால் இயங்குதலை யொழித்தவளவில் தங்கிய அம்மலையான தெழும்பொருட்டு விளக்கம் பொருந்திய தன் கரங்களை யூன்றலை யொக்கும்.

(வி - ம்.) வயக்கம் - விளக்கம். துயக்கம் - வருத்தம். மாண - மிக. இயக்கம் மாற்றலும் - செல்லுதலை யொழித்தவளவில். தகையும் - ஒக்கும்.

(5)

 பிரம னேமுதன் மாயனே முதலெனப் பிணங்கும்
 விரகி லார்க்கெலாம் விடமிடற் றிறைவனே முதலென்
 றுரனை யேய்ப்பவர் போன்றுளா ருவணமேக் குயர்த்தோர்
 பரவு வேதர்க ளாவயிற் பற்பலர் பயில்வார்.

(இ - ள்.) பிரமனே முதற் கடவுளென்றும், மாயனே முதற்கடவுளென்றும் கூறி மாறுபடுகின்ற அறிவினுட்பமில்லோர் யாவர்க்கும் கருடக்கொடியினை யுயர்த்திக் கட்டியோரும் பரவுகின்ற வேதத்தினை யுடையோருமாகிய விண்டு பிரமர்கள் நீலகண்டத்தையுடைய சிவபெருமானே முழுமுதற் கடவுள் (செத்துப் பிறக்கின்ற) யாங்கள் முழுமுதற் கடவுளல்லம் எனக் கூறி உண்மை ஞானத்தினை அறிவுறுத்துபவரைப்போல அக்கைலையினிடத்துப் பலப்பல பிரம விட்டுணுக்கள் திரிவார்.