பக்கம் எண் :

புராண வரலாற்றுப் படலம்169

(வி - ம்.) விரகு - அறிவினுட்பம். உரன் - ஞானம். ஏய்ப்பவர் -ஈண்டறிவுறுத்துபவர்.

(6)

 அண்டம் யாவையு மரைக்கணத் தளவையி னவித்துப்
 பண்டு போலவை யுயிரொடும் படைத்தினி தளிக்க
 மண்டு மாற்றல்பெற் றுள்ளபூ தங்கண்மா மலநோய்
 விண்ட சாரதத் தலைவரும் விளம்பிலெண் ணிலரால்.

(இ - ள்.) எல்லா வுலகங்களையும் அரைக்கணப் பொழுதினிற் கெடுத்து முன்னர்ப் போலவே யவ்வுலகங்களை ஆன்மாக்களோடும் ஆக்கி யினிதாகக் காக்கும் வல்லமையைப் பெற்றுள்ள பூதக்கூட்டங்களையும், பெரிய ஆணவமலமாகிய நோயை (இறைவன் திருவருளால்) நீங்கிய பூதகணத் தலைவர்களையும் சொல்லப்புகின் அளவிலராவர்.

(வி - ம்.) அவித்து - கெடுத்து. சாரதம் - பூதம்.

(7)

 நலக்கு மாகம மறையெலா நவின்றுமெய் யுணர்ந்து
 மலக்கு றும்பினைத் துமித்தின்ப வாரியிற் படியும்
 அலக்க ணற்றவர் தமக்குமெய்ப் பணியலா தின்மை
 துலக்கி நந்தியெம் பிரானமர் காவலுந் துதையும்.

(இ - ள்.) (ஓதினார்க்கு) நன்மையைத் தருகின்ற ஆகமங்களும், வேதங்களுமாகிய எல்லா நூலினையும் பயின்று மெய்ப்பொருளாகிய இறை நிலைமையினை யுணர்ந்து ஆணவமலமாகிய குறும்பினைக் கெடுத்து இன்பக் கடலின் மூழ்குந் துன்பமற்றவராகிய பெரியார்க்கெல்லாம் (இறைபணியாகிய) உண்மைப் பணியையன்றி வேறு பணியில்லாமையை விளக்கி நந்தியெம்பெருமான் விரும்பும் காவலோடும் பொருந்தும் அம் மலை.

(வி - ம்.) நலக்கும் - நன்மையைத் தருகின்ற. மெய் - சிவம். துமித்தல் - கெடுத்தல். அலக்கண் - துன்பம். மெய்ப்பணி - இறை பணி. துதையும் -
நெருங்கும்.

(8)

 மதியொ ராயிரம் வகிர்ந்திரு பாங்கினும் வயக்கிவைத் தெனத்தோற்றும்
 நுதியி ராயிர மணிச்செழு மருப்பினு நொறிலுளை யெழுமான்றேர்க்
 கதிரி ராயிரங் கோத்தன கிம்புரிக் களிறுவாக் கியதானம்
 நதியு ராய்த்தவழ்ந் தசும்புதோ யிசும்பிவர் நடையரி முடமாமால்.

(இ - ள்.) ஓராயிரம் சந்திரர்களைப் பிளந்து இருபக்கத்தினும் விளக்கமுறும்படி வைத்ததென்று சொல்லும்படி தோன்றுகின்ற கூர்மையோடு கூடிய முத்துக்களையுடைய செழித்த இரண்டாயிரம் கொம்புகளினும் வேகத்தோடு செல்கின்ற தலையாட்டமெழுந்த குதிரைகள் பூட்டிய தேரினையுடைய இரண்டாயிரஞ் சூரியர்களைக் கோத்தாலொத்த பூணினை யணிந்த அயிராவணமென்னும் யானைகொட்டிய மதநீராகிய நதியானது பெயர்ந்து செல்லுதலான் துளித்தல் பொருந்துகின்ற வழுக்குநிலத்துச் செல்லுகின்ற நடத்தலையுடைய சிங்கங்கள் (வழுக்கி வீழ்தலால்) முடத்தன்மையை யடையும்.