பக்கம் எண் :

170தணிகைப் புராணம்

(வி - ம்.) வயக்கம் - விளக்கம். நொறில் - வேகம். கிம்புரி - தந்தப்பூண். உராய் - பெயர்ந்து. அசும்பு - துளி. இசும்பு - வழுக்கு நிலம். நடையரி - சிங்கம்.

(9)

 வழுக்கி யஞ்சிறைத் தும்பிக ளவசமாய் மலர்த்தலை விழவீமற்
 றொழுக்கி ரும்பொழின் மதுப்புனற் றாரைக ளுடன் விராய்த் தவழ்ந்தேகிச்
 செழுக்கு தம்பைநான் றெருத்தலைத் தரவரு திருப்பதி தனைக்காமம்
 முழுக்க வென்றவன் புணர்ந்தெழு கண்டகை முதுநதி வளங்காட்டும்.

(இ - ள்.) அழகிய அகஞ்சிறையினையுடைய வண்டுகள் (கள்ளுண்டு) வழுக்குதலடைந்து பரவசமெய்தி மலர்களிடத்தே வீழாநிற்க, அம்மலர்கள் பெரிய சோலைகளொழுக்குகின்ற தேனாகிய நீர்த்தாரைகளுடன் கலந்து ஊர்ந்து சென்று, செழித்த குதம்பையென்னும் காதணி, தொங்குதலுற்றுப் பிடரை வருத்தும்வண்ணம் வருகின்ற இலக்குமியின் கணவனாகிய திருமாலாகிய மோகினியைக் காமங்களனைத்தினையு மியல்பாக வென்றவனாகிய சிவபெருமான் கூடியெழுகின்ற கண்டகை யென்னும் பழைய நதியின் வளத்தைக் காட்டும்.

(வி - ம்.) தாரைகள் அம்மலரோடும் விராய்ச் சென்றென்க. மதுவைச் சிவந்த நீராகவும், வண்டை யந்நதியின் மிதந்து வருகின்ற சாளக்கிராமமாகவும் கொள்க. இதனுற்பத்தியினைக் கந்தபுராணம் சாளக்கிராமப் படலத்தானுணர்க. திருப்பதி - இலக்குமிநாயகன்; விண்டு. வண்டைமோகினிக்கும் பூவினை இறைவனுக்கும் உவமையாகக் கொள்வாரு முளர்.

(10)

 வளியு ளர்த்தலுஞ் சந்தனங் கிளைகளை மணமலி யிணர்ப்பூந்தேந்
 தளியு கக்கருப் பூரமம் மரத்தொகை தரவிராய் நனிதேய்த்த
 தெளிகொ டேய்வையுண் முழுகிய குவடுக டேவிவெம் முலைமான
 வெளிறு துன்றுதந் நிறமருந் தவத்தினால் விளித்தொளிர் வனபோன்ற.

(இ - ள்.) காற்று வீசாநிற்க (அம்மலையின்கண்ணுள்ள) சந்தன மரங்கள் கிளைகளால் வாசனைமிகுந்த கொத்துக்களிலுள்ள மலர்கள் தேன்றுளியைக் கொட்டக்கருப்பூர வாசத்தினை (ஆண்டுள்ள) கருப்பூர மரக் கூட்டங்கள் தராநிற்க (இவைகளைக்) கலந்து மிகவும் தேய்க்கப் பெற்ற தெளிவு பொருந்திய (இங்ஙனமரைபட்ட) சந்தனத்தில் மூழ்கிய (அம்மலையின்) சிகரங்கள் உமையம்மையாரது விருப்பத்தைத் தரத்தக்க தனத்தினை யொக்கும்வண்ணம் வெண்மை பொருந்திய தன் வடிவத்தினை (ஆண்டுச்செய்த) அரிய தவத்தினாற் கெடுத்து விளங்குவன போன்றன.

(வி - ம்.) உளர்தல் - அசைதல். தளி - துளி. சந்தனம் - சந்தனமரங்கள். தேய்த்த - (கிளைகளாற்) றேய்த்த. தேய்வை - சந்தனம். தேய்த்த தேய்வை யென்க. குவடு - எழுவாய். வெளிறு - வெண்மை. விளித்து - கெடுத்து.

(11)

 கற்றை வெங்கதி ருடற்றிய விருட்டுணி கதிரவன் மனையாமென்
 றுற்று டற்றுவ தெனக்களி வண்டின முழக்குபு மதுமாந்தும்