பக்கம் எண் :

172தணிகைப் புராணம்

கைலையின்கண் இளங்கதிரோடுகூடிய பற்பல சூரியர்கள் வலிகொள்ளத் திரண்டாற்போல மிக்க ஒளியோடு கூடிய ஆயிரந் தூண்கள் நெருங்கப் பெற்று இரத்தினமாலைகள் அசைகின்ற மின்னலென்று சொல்லும்படி தூங்கி யசைதலுற்று மிக்க அழகு பொருந்திய மண்டபத்தின் நடுவே.

(வி - ம்.) மாதர் - காதல்; "மாதர்காதல்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானுணர்க. எறுழ் - வலி. "இஞ்சியே புரிசையிஞ்சி யெறுழென்ப வலிதண்டாமே" என்னும் நிகண்டா னறிக' விறந்து - நெருங்கி. நாலல் - தொங்குதல்.

(14)

 ஒளிபி ழம்பிய வாரமும் போர்வையு முத்தரீ யமுமான
 களிபி ழம்புதம் மினமெனத் தாங்களுங் கதிபெறக் குறிக்கொண்டாங்
 களிபி ழம்பிய பாததா மரைநிழ லகத்தொடு புறம்போர்ப்பத்
 தெளிபி ழம்பிரு நாகமு மடங்கலுஞ் செறிந்துதாங் கணைமேலால்.

(இ - ள்.) ஒளி திரட்சியுற்ற மாலையும், மீக்கோளும், மேலாடையு மாகிய களிப்புத் திரண்ட தங்க ளினமாகிய பாம்பு, யானை, சிங்கமா மிவைகளைப்போலத் தாங்களும் முத்தியடையக் குறிக்கொண்டு அவ்விடத்து அருள்திரண்ட பாதமாகிய தாமரையின் நீழல் (தியானித்தலால்) உள்ளத்தினும் (தாங்குதலாற்) புறத்தினும் போர்ப்பத் தெளிவு விளங்கிய பாம்பும், யானையும், சிங்கமும் நெருங்கித் தாங்கிய அணையின் மேல்.

(வி - ம்.) பிழம்பு மூன்றையும் திரண்டவெனப் பொருள் கொள்க. இருநாகம் - பாம்பு, யானை.

(15)

 இருந்த வம்பல வுழந்துதன் மாசினை யிகந்துபே ரொளிகூர்ந்து
 திருந்து வெண்மதி விசும்பெழ வார்சடைச் சிவணிய வொருநாகம்
 அருந்தின் மற்றிது பெருஞ்சுவைத் தாமென வாவிவௌ வுபுமீண்டு
 பொருந்தி னாலென வயங்குகாம் புயர்குடைப் பொழிகதிர் நிழல்பம்ப.

(இ - ள்.) பெருமையாகிய தவங்களை வருந்திச் செய்து தன்களங்கம்நீங்கப்பெற்றுப் பேரொளிமிகுந்து திருந்திய வெள்ளிய சந்திரன் ஆகாயத்தின்கண்ணே யெழாநிற்க நீண்ட சடையின்கண்ணே பொருந்திய ஒப்பற்ற ஒரு பாம்பானது அமிர்தினைப் பார்க்கினும் இது பெருஞ் சுவையினை யுடைய தாகுமென்று தாவி வாயாற்கவ்வி மீண்டும் அச்சடை காட்டிற் பொருந்தினாற்போல விளங்குகின்ற காம்புயர்ந்த குடையானது சொரிகின்ற கிரணங்கள் நிழல்விரிய.

(வி - ம்.) உழந்து - செய்து. வாவி - தாவி. வௌவுபு - கௌவி மீண்டு பொருந்தினாலென - சடையின் மீண்டு பொலிந்தாற்போல. பம்ப - விரிய.

(16)

 நாமி கப்புறி னமைப்பரித் துழலுமா னைந்துயிர் தனைமன்ற
 தாமி கப்புறு தன்மைநா யகன்றிருச் சந்நிதிக் குரித்தான
 ஆமி தைக்குறித் தெனமகிழ்ந் தெழுந்தெழுந் தாட்டயர் வனபோலக்
 காமர் முற்றிழைக் கன்னிய ரிரட்டிய கவரிக ணனிதுள்ள.