பக்கம் எண் :

புராண வரலாற்றுப் படலம்173

(இ - ள்.) நாம் நீங்கின் நம்மைத் தாங்கிச் சுழலுகின்ற மானினங்கள் வருந்தி உயிரை நிச்சயமாகத் தாங்கள் நீங்கும் தன்மையானது எவ்வுலகங்கட்கும் நாயகனாகிய சிவபெருமான் அழகிய சந்நிதிக்குரித்தான வாகுமிதனைக் கருதியென்று மகிழ்ச்சியுற் றெழுந்தெழுந்து விளையாட்டைச் செய்வனபோலக் கண்டார்க்கு விருப்பம் வரத்தக்க தொழின் முற்றிய அணிகலன்களை யணிந்த இளம்பெண்கள் அசைத்த கவரிகள் மிகத் துள்ளாநிற்க.

(வி - ம்.) நாமென்றது ஈண்டுக் கவரிமயிர். "மயிர் நீப்பின் வாழாக்கவரி மாவன்னார் - உயிர்நீப்பர் மானம் வரின்" என்னும் பொது மறையின் கருத்தமைந்திருத்தலை யுணர்க. ஆமிது - ஆகின்றவிதனை. காமர் - விருப்பம். ஆட்டு - விளையாட்டு.

(17)

 கற்றை வார்சடை செஞ்செவி மணியுரங் கரங்கடி தடம்பூந்தாள்
 முற்ற ராவணி முழுவதுந் தழைத்தொளி முதிர்ந்தெழில் வளம்பொங்கும்
 பெற்றி சூழ்ந்தது முயன்றுளார் போன்மெனப் பிடிநடை மடமாதர்
 பற்றி வீசுசாந் தாற்றிகள் வளியெழீஇப் பாங்கெலாங் குளிர்தூர்ப்ப.

(இ - ள்.) கூட்டமாகிய நீண்ட சடை, செவ்விய காது, அழகிய மார்பு, கை, அரை, அழகிய பாதம் ஆமிவைகளை யடைந்து அரவமாகிய ஆபரணங்களெல்லாம் செழித்து ஒளிமுதிர்ச்சியுற்று அழகின் வளம் பொங்கும் தன்மையை யாராய்ந்து அவ்வளம் பொங்குதலை முயன்று தாங்களுமடைந்து விளங்குகின்றனரென்று கண்டோர் சொல்லும் வண்ணம் பெண்யானையின் நடையை யன்ன நடையினையுடைய அழகிய பெண்கள் பிடித்து வீசிய விசிறிகளினின்று போந்த காற்றானது எழுந்து பக்கமெல்லாம் குளிர்ச்சியை நிறைக்க.

(வி - ம்.) கடிதடம் - அரை. முற்று - அடைந்து. முயன்றுளார்போன்ம் - முயற்சிசெய்து மேன்மை யடைந்துள்ளார் போலும்.

சாந்தாற்றி - விசிறி. "சாந்தாற்றி பேர்முரணித் தாமரைமுத்தன்னவெயர் - போந்தாற்றி ஞாங்கர்ப் பொலிவெய்த" என்னும் திருவெங்கையுலாவா னறிக. தூர்ப்ப - நிறைப்ப.

அந் நாகங்கள் இறைவனையண்மி வளம் பெற்றாற்போல இப்பெண்களும் இறைவனையண்மி வளம்பெற்றன ரென்று கண்டோர் சொல்லுதற் கேதுவான வனப்பு வாய்ந்த பெண்களென்பார் "பெற்றிசூழ்ந்ததுமுயன்றுளார் போன்மெனப் பிடிநடைமடமாதர்" என்றார்.

(18)

 குழலும் வீணையுந் தோற்பொலி முழவமுங் குரைகட லமிழ்தன்ன
 மழலை கூர்மொழிப் பாடலு மயங்கவந் தாடலை மதித்தாங்கண்
 அழலம் போருகக் கரமுகிழ்த் தஞ்சலி யளித்தவ ரவ்வாறே
 விழவு கூர்திரு வனப்பட வுள்ளகம் விளிந் தனர் தலைநிற்ப.

(இ - ள்.) புல்லாங்குழலும் வீணையும் தோலினாற் பொலிவுற்ற மத்தளமும் ஒலிக்கின்ற திருப்பாற் கடலிலுளதாகிய அமுதத்தை யொத்த மழலைமிகுந்த மொழிப்பாட்டுங் கலந்து நிருத்தஞ் செய்தலைக் கருதி அவ்விடத்துச் செந்நிறம் பொருந்திய செந்தாமரை மலர்போன்ற