கரங்களைக் குவித்து வணக்கஞ் செய்தவர் அவ்வணக்கம் செய்த வண்ணமே சிறப்புமிகுந்த அழகானது தம்மை வருத்த மனநிலை வேறு பட்டவர்களாகி அவ்விடத்தே நிற்க. (வி - ம்.) தோற் பொலிமுழவம் - தோலாற் பொலிந்த மத்தளம். கூர் - மிகுந்த. மயங்க - கலக்க. அழல் - செந்நிறம், அவ்வாறே - அஞ்சலி செய்தவண்ணமே. விழவு - சிறப்பு. திருவனப்பு - மிக்க வழகு. உள்ளகம் - ஈண்டு மனம். விளிதல் - நிலைகெடல். தலை - அவ்விடம். (19) | மாய னாதிவிண் ணவரெலாந் திருவுரு வனப்பினை யெதிர்நோக்கிச் | | சாயன் மாதரார் பெண்ணவா யவ்வுருச் சத்தியிற் றழீஇக்கோடல் | | மேய காலையின் மோகமிக் கெழுதலும் வினைமறந் தடிபோற்றும் | | தூய வானர மகளிர்போற் கையறு தொழின்மையி னனிநீட. |
(இ - ள்.) விண்டு முதலாகிய தேவர்களெல்லாம் (இறைவன்) திருவுருவின் அழகினை யெதிரே கண்டு மென்மைத் தன்மையையுடைய பெண்களிடத்துள்ள பெண்டன்மையை விரும்பி அப்பெண் வடிவைத்தங்கள் சத்தியினாலே தழுவிக் கொள்ளுதலைப் பொருந்திய காலத்தில் ஆசைமிக் கெழுதலினால் (தாங்கள் வந்த) தொழிலை மறந்து திருவடியை வணங்கும் பரிசுத்தம் பொருந்திய தெய்வமகளிரைப் போலச் செயலற்ற தொழிலின்றன்மையிலே மிக நீட்டிக்க. (வி - ம்.) சாயல் - மென்மை. மாதரார் பெண்டன்மையை விரும்பி யென்க. அவ்வுரு - அப் பெண்வடிவு. தமது சத்தியில் - தங்கள் வல்லமையினாலே. தழீஇக்கோடல் - தழுவிக் கொள்ளுதலை. வினை மறந்து - தாங்கள் கருதிவந்த தொழிலை மறந்து. அடி - இறைவனடி "மோகமிக் கெழுதலும் வினைமறந்தடி போற்றும் - தூய வானர மகளிர்" என்றது மேற்செய்யுளிற் கூறினாரை யென்க. (20) | கொம்மை மென்முலைக் கொடியிடைக் கிடமருள் குழகன தடிநாடும் | | செம்மை நெஞ்சினர்க் குறுவழி யண்மைய செவ்விய வெளிதுய்ப்பத் | | தம்மை யல்லதில் லாமையைச் சாற்றுத றகையவா கமமெல்லாம் | | விம்மி ருங்கதி ருருவுகொண் டண்மையின் விராயமர்ந் தினிதேத்த. |
(இ - ள்.) வட்டமாகிய விருப்பினைத் தருகின்ற மென்மையாகிய தனங்களையுடைய கொடிபோன்ற இடையோடு கூடிய உமையம்மை யாருக்கிடப்பாகத்தையருளிய இறைவன் திருவடியை ஆராய்கின்ற செப்பமான மன நிலையையுடைய அடியார்களுக்குச் செவ்வையுடையனவும், அண்மையவுமாகிய பொருந்துதற்குரிய நன்மார்க்கத்திற் செலுத்த (ஆகமமாகிய) தங்களை யல்லது வேறு நூலின்றன்மையைச் சாற்றுதலை யொப்ப ஆகமங்களெல்லாம் ஒளி மிகுந்த ஒளியுருவம் கொண்டு அண்மைக்கட் பொருந்தியிருந்தினிதாக ஏத்தாநிற்க. (வி - ம்.) கொம்மை - வட்டம். அண்மையவும் செவ்வியனவுமாகிய வழியிலுய்க்கத் தம்மையல்ல தில்லாமையைச் சாற்றுதலை யொப்ப என்க. நெஞ்சினர்க்கு இல்லாமை என இயைக்க. ஆகமங்களெல்லாம் ஒளி வடிவாகு மென்பர். (21) |