| மயர்த புத்தினி துரைமதி யெனவருள் வழங்கியா வயினின்றும் | | வெயிற ழும்பிய வுவளக வரைப்பினை மென்கொடி யொடும்போந்தான். |
(இ - ள்.) குற்றம் விளங்குகின்ற ஆணவப் பகையையும், உறவாக அநாதியே பொருந்திய சிவமாகிய நம்மையும் அறிந்து உணர்வு தோன்றப் பெற்றவராதலினால் இம்முனிவர்களுக்கு மெய்ப்பொருளை வரலாற்று முறைப்படி மயக்கம் நீக்கி இனிதாக உபதேசிப்பாயாக என அருளிச்செய்து அவ்விடத்தினின்றும் ஒளி விளங்கிய அந்தப்புரத்தின்கண் மெல்லிய கொடிபோன்ற இடையினையுடைய உமையம்மையாரோடும் சென்றான். (வி - ம்.) செயிர் பிறங்கிய பகைமை - அநாதியே குற்றமாக விளங்கிய ஆணவம். உறவெனச் செறிந்த நம்மையும் - உறவாகக் கலந்த சிவமாகிய நம்மையும். பாரா : வினையெச்சம். உயிர் : ஈண்டறிவை யுணர்த்தி நின்றது. உவளகம் - அந்தப்புரம். "தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக். குவளை யேயள வுள்ள கொழுங்கணாள், அவளை யேயமு தாகஅவ்வண்ணலும், உவள கம்தன தாக ஒடுங்கினான்" என்னும் சிந்தாமணி (243) செய்யுளா னறிக. (27) | அண்ணலா ரருளிச் செய்த வருடலைக் கொண்டு போற்றிப் | | புண்ணிய சனற்கு மாரன் புளகமோ டாங்கு வைக | | எண்ணிய வெண்ண முற்ற வெம்பிரான் கருணை வெள்ளம் | | நண்ணிய முனிவர் தாழ்ந்து நயந்தனர் கிளக்க லுற்றார். |
(இ - ள்.) பெருமையிற் சிறந்த சிவபெருமான் திருவாய்மலர்ந்தருளிய அருளைச் சிரமேற்கொண்டு துதித்துப் புண்ணிய வடிவாகிய சனற்குமார முனிவன் புளகாங்கிதத்தோடு அக் கைலையின்கண் வைகத் தாங்கள் எண்ணிய பொருள்களெல்லாம் எண்ணியவண்ணம் முடிவு பெற எங்கள் தலைவனாகிய சிவபிரானது கருணை வெள்ளம் பொருந்திய முனிவர்கள் வணங்கி விருப்பினராகிச் சொல்லத் தொடங்கினார். (28) | முனிவர ரெனைத்துந் தேறா மொய்யரு ணிதியம் பெற்றுக் | | கனிமொழி பாகன் பாதக் கலப்பெனுஞ் சேக்கை சேக்கும் | | புனிதமெய்ச் சனற்கு மார புங்கவ நின்னைச் சேர்ந்தாம் | | இனியடி யேங்கட் கெய்தா விரும்பொருள் யாங்க ணுண்டே. |
(இ - ள்.) முனிவர்கள் சிறிதும் தெளியாத மிக்க அருளாகிய நிதியத்தைப் பெற்றுக் கனியினிரசம் போன்ற சொல்லையுடைய உமையம்மையாரைப் பாகத்திலுடைய இறைவனது திருவடியிற் கலத்தலாகிய தூய்மையான வடிவத்தோடுகூடிய சனற்குமார முனிவரென்னும் மேலானவரே! நின்னையடைந்தாம். இனி அடியேங்களாகிய எங்கட்கு அடைய முடியாத பெரிய பொருள் எங்ஙனமுள்ளது. (வி - ம்.) எனைத்தும் - சிறிதும். பாதக்கலப்பெனுஞ் சேக்கை -திருவடியிற் கலத்தலாகிய பற்றிடம். சேக்கும் என்பது ஈண்டு அப்பற்றிடத்திற் புகுதலை யுணர்த்தி நின்றது. "பற்றாங்காலையற்றீர் பற்றும் பற்றாங்காலை பற்றி" என வருந் திருவாக்கா னறிக. (29) |