பசுபாசமென்னும் மூன்று பொருளினைத் திரியக்காண்டல், இரட்டுறக் காண்டல் தெளியக்காண்டல் என்னும் மூவகை யுணர்வினாலே தெளிவித்தான். (வி - ம்.) நன்று - பெரிது. மும்மையுணர்வு - கூட்டவுணர்வு, பொதுவுணர்வு, தன்னியல்பென்னு மூவகையுணர்வு. (32) | இங்கிது நந்தி யெங்கோ னிருந்தவப் பேறு வாய்த்த | | மங்கண னாதியான மாதவத் தோர்க்குப் பண்டு | | சிங்கிய மலத்தி னுள்ளந் தெளிதரத் தெருட்டிற் றாகும் | | நுங்களுக் குரைத்தா மென்று நுவன்றனன் மோன முற்றான். |
(இ - ள்.) நந்தியாகிய எங்கடலைவன் இதனைப் பெரிய தவப்பயனேய்ந்த மங்கணன் முதலாகிய பெரிய தவத்தினையுடைய முனிவர்களுக்கு முன்னர்க் குறைந்த மலத்தோடு கூடிய உள்ளந்தெளியும்படி தெளிவித்ததாகும். (அதனை) உங்களுக்கும் உரைத்தனமென்று சொல்லினவனாகி மௌன நிலையிலிருந்தனன். (வி - ம்.) மங்கணன் - ஓர் முனிவன். சிங்கிய - குறைந்த. நுவன்றனன் : முற்றெச்சம். (33) | கேட்டனன் றமைதி பெற்றுக் கிளர்ந்துடன் சிந்தித் தங்கண் | | வாட்டமின் றெழுவர் தாமு மயர்தபத் தெளிந்த பின்றைக் | | காட்டரு நிட்டை கூடல் கலவும்வா தனையி னெய்தார் | | மீட்டவுள் ளத்த ராகி மெலிந்துதங் குருவைச் சார்ந்து. |
(இ - ள்.) (இம்முனிவர்கள்) கேட்டலானே பெரிதும் சாந்தியடைந்து கிளர்ச்சியுற்று (அக்கேட்ட பொருளை) உடனே சிந்தனை செய்து அஞ்ஞான்றே வருத்தமின்றி யெழுவரும் மயக்கம் நீங்கத்தெளிதலடைந்த பின்னர் உவமை காட்டற்கியலாத நிட்டையின்கட் பொருந்தலைத் (தம்முட்) கலந்துள்ள வாசனா ஞானத்தினா லடையாதவராகி நிட்டை கூடுதலினின்று நீங்கிய வுள்ளத்தை யுடையவராகி மெலிவுற்றுத் தங்கள் பரமாசாரியனாகிய நந்தியெம்பெருமானை யடைந்து. (வி - ம்.) காட்சி மூவகையாகுமென முற்செய்யுளிற் கூறினார். இம்மூன்றும் அதிபரிபக்குவ முடையார்க்குக் கேட்ட மாத்திரையே யொருங்கு நிகழும். ஏனையோர்க்குச் சோபான முறையாற் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்னும் இம்மூன்றானும் முறையே நிகழ்வன வாகலான் இக்கவியிற் கூறினார். நன்று - பெரிது. காட்டு - எடுத்துக்காட்டு. கூடல் - இரண்டாவதன் றொகை. வாசனை - அனுபவத்தின் காரியமாய் நினைவிற்குக் காரணமாயுள்ளது. மீட்ட - (நிட்டையினின்றும்) மீட்ட; (34) | ஐயனே போற்றி யாண்ட வமலனே போற்றி மூவா | | மெய்யனே போற்றி நின்னை மேவியு மேவார் போல | | வையக மாட்டெம் முள்ளம் வழிக்கொள லாயிற் றெந்தாய் | | உய்யநின் கருணை யின்னு முறுத்தெனக் குமரன் கூறும். |
|