| நாவலர் துவன்றுஞ் சாலிவா டீசம் நற்கதி யருள்சம்பு வனமே | | வீவிரி காந்தட் டிரிசிர வோங்கன் மேதக வளர்சுசப் பேசம். |
(இ - ள்.) காவிரியின் வளத்தையுடையனவாகிய உசிரமென்னும் வைப்பும், அக்காவிரியின் றென்றிசைக்கண்ணே அழகு விளங்குகின்ற உத்தாலக நகரமும், பூக்களை விரிக்கின்ற சோலைகளோடுகூடிய பொதியின் மலையைப் பொருந்தியவர்கள் நீங்குதற் கருமையாகிய விக்கிரம சிங்கபுரமும், நாவலர் குழுமிய திருநெல்வேலியும், நல்ல வீட்டினைத்தருகின்ற சம்புவனமும், பூக்களை விரிக்கின்ற காந்தட் செடிகளையுடைய திரிசிரா மலையும், மேன்மை பொருந்த வளர்கின்ற சுசப்பேசமென்னும் வைப்பும். (வி - ம்.) உசிரம் - காவிரிக் கரையிலுள்ளது. (44) | பாட்டளி முரலும் பொய்கைசூழ் பஞ்ச நதம்பய னருள்புட்ப விபினம் | | கோட்டரி யுகளும் வாஞ்சியங் கோணை மதில்புடை குலவுசீ புரமெய் | | வீட்டினர் வதியும் பசுபதித் தலமே வரும்பஞ்ச லோகமாத் தானம் | | வாட்டமுற் றிரிக்கு மிடைமரு தென்றூழ் வழக்கறு மாடமா யூரம். |
(இ - ள்.) பாட்டுக்களை வண்டுகள் பாடுகின்ற தடாகங்களாற் சூழப்பெற்ற திருவையாறும், பயனைத் தருகின்ற புட்பக்காடும், மரக்கிளை களிலே குரங்குகள் துள்ளிக் குதிக்கின்ற திருவாஞ்சியமும், அழியாத மதில்கள் பக்கத்தே விளங்குகின்ற ஸ்ரீபுரமும், உண்மையாகிய வீட்டினை யடைந்தவர்களாகிய தத்துவஞானிகள் தங்கும் பசுபதித்தானமும், பொருந்துகின்ற பஞ்சலோகமாத்தானமென்னுமிடமும், தன்னை யடைந்தோர்களுடைய தளர்ச்சி முற்றிலும் போக்கும் திருவிடைமருதூரும், சூரியன் செலவைத் தடைப்படுத்துகின்ற மாடங்களோடுகூடிய மாயூரமென்னும் திருப்பதியும். (வி - ம்.) கோணை - அழியாமை . "கோணை வெம்மணிக்கொம்மையெயிற்புரம்" (நைடதம் - நகரப்படலம்). (45) | சீர்த்தசித் திரவே திகமடி யார்க்குத் தேனிக்கு மாலிங்கே சுரமே | | சூர்த்தவன் பிணிக டுமிசித்தா ரணியந் துயர்விடு சுநாகத வைப்பு | | பார்த்தலத் தொளிகள் பரப்புகண் டீசம் பரவுசீர்ச் சிதம்பர நகரம் | | ஓர்த்தவ ரலக்க ணொறுத்திடுந் தால வனமத்தி யாபகே சுரமே. |
(இ - ள்.) சிறப்பினையுடைய சித்திர வேதிகமென்னும் தலமும், அடியார்கட்கு இனிக்கின்ற மாலிங்கேசுவர மென்னும் வைப்பும் அச்சத்தைத் தருதற்கேதுவாகிய வலிய பிணிகளை நீக்குகின்ற திருவாவடுதுறையும், துயரைநீக்குதற் கேதுவாகும் சுநாகதமென்னுமிடமும், பூமியின்கண் ஒளிகளைப் பரப்புகின்ற திருக்கண்டீச்சுரமும், (யாவரும்) துதிக்கின்ற சிறப்பினையுடைய சிதம்பரநகரமும், (இறைவன் திருவருணிலையை) ஆராய்ந்தவர்களாகிய அடியார்களுடைய துன்பத்தினை நீக்குகின்ற திருப்பனந்தாளும், அத்தியாபகேசரமும். (வி - ம்.) தேனித்தல்-தியானித்தல். சித்தாரணியம்-திருவாவடுதுறை. (46) |