| தெண்டிரைக் கங்கைக் காசிமா நகர்க்குத் | | தெனாதியோ சனையிரு நூற்றின் | | வண்டமிழ்க் காஞ்சி வடாதிரண் டனிற்கீழ் | | வளைகடன் மேற்றிசை யைந்தில் | | தொண்டர்சூழ் விரிஞ்சை வடகிழக் கெல்லை | | மூன்றினிற் றுலங்குகா ளத்தி | | அண்டர்சூழ் வரைக்கு நிருதிமுன் றரையி | | னரசுவீற் றிருப்பதக் குன்றம். |
(இ - ள்.) தெள்ளிய அலையோடு கூடிய கங்காநதியாற் சூழப் பெற்ற காசியாகிய பெரிய நகரினுக்குத் தெற்கே இருநூறு யோசனை தூரத்தின் கண்ணும், வளப்பம் பொருந்திய தமிழினையுடைய காஞ்சிமா நகர்க்கு வடக்கே இரண்டி யோசனை தூரத்தின் கண்ணும், கிழக்கே வளைந்துள்ள கடலுக்கு மேற்றிசை ஐந்தியோசனை தூரத்தின் கண்ணும், அடியார்கள் சுற்றி வணங்குகின்ற திருவிரிஞ்சை நகரத்தின் வடகிழக்கெல்லையினின்றும் மூன்றியோசனை தூரத்தின் கண்ணும், தேவர்கள் சூழப்பெற்ற விளங்குகின்ற திருக்காளத்தி மலைக்குத் தென் மேற்குத் திசையின் மூன்றரை யோசனை தூரத்தின் கண்ணும் அத்தணிகைமலை வேறொன்றற்கில்லாத சிறப்புடனிருப்பதாகும். (வி - ம்.) தெனாது - தெற்கில். வடாது - வடக்கில். வளைகடல் : வினைத்தொகை. (62) | குழவிவெண் மதிய மிலைச்சிய வேணிக் | | குருபரன் பிரணவப் பொருளை | | விழைதகத் தவத்திற் பெற்றுவீ ராட்ட | | காசஞ்செய் வீராட்ட காசம் | | அழலவிர்ந் தனைய நெட்டிலைக் கதிர்வே | | லவாயினி தமர்ந்தருள் குமரன் | | சுழல்பவங் குமைக்குந் தன்பெயர் விளங்கத் | | தொழுஞ்சிவக் குறியுமாங் குளவால். |
(இ - ள்.) இளமையாகிய வெள்ளிய பிறைச்சந்திரனைச் சூடிய சடாபாரத்தினையுடைய குருபரனாகிய சிவபெருமான் பிரணவார்த்தத்தினை விருப்பந்தகத் தவஞ்செய்து பெற்று வீரநகை செய்த வீராட்டகாசம். அக்கினி விரிந்தாலொத்த நீண்ட இலை வடிவினையுடைய ஒளி யோடுகூடிய வேற்படையை விரும்பி இனிதாக எழுந்தருளியுள்ள குமாரக்கடவுள் (பிறப்பிறப்பிற்) சுழலுதற் கேதுவாகிய பாவங்களைக் கெடுக்கும் தன் பெயர் விளங்கும் வண்ணம் தொழுகின்ற குமரேசலிங்கம் அத் தணிகையின் கண்ணுள்ளன. (வி - ம்.) வீராட்டகாசம் - வீரநகை செய்தல். சுழல்பவம்-(பிறப்பிறப்பிற்) சுழலுதற் கேதுவாகிய பாவம். தன், ஈண்டுக் குமரக்கடவுள், |