பக்கம் எண் :

புராண வரலாற்றுப் படலம்191

 குன்றவர் மடந்தை குவிமுலை மார்பிற்
           கோட்டுமண் கொளப்புணர் வேலோன்
 அன்றுமெய் யன்பிற் போற்றிய வாபச்
           சகாயனென் றடற்களிற் றிறையும்
 மன்றலங் கமலத் தயன்படைப் பிளையோன்
           வழங்குமா றருந்தவ முஞற்றி
 ஒன்றிய வுளத்தான் வழிபடு மெண்டோ
           ளுத்தமன் குறியுமற் றுளவால்.

(இ - ள்.) குன்றவாணர் புதல்வியாகிய வள்ளிநாயகியாருடைய குவிந்த கொங்கைகள் குத்திப் பெயர்க்குமாறு கூடுகின்ற மார்பினையுடைய முருகக் கடவுள் நன்மை யமைந்த மெய்யன்பினால் வழிபட்ட ஆபச்சகாயனென்று சொல்லப்படுந் திருப்பெயரினையுடைய வலிமை பொருந்திய யானைமுகப்பிரானும், வாசனை பொருந்திய தாமரை மலரி னெழுந்தருளியிருக்கின்ற பிரமனாக்குதற் றொழிலைக் குமாரக்கடவுள் செய்யும் வண்ணம் அரிய தவத்தைச் செய்து ஒற்றுமைப்பட்ட திருவுள்ளத்தோடு வழிபாடு செய்த எண்டோள்களையுடைய உத்தமனாகிய குமாரலிங்கமும் அங்குள்ளனவாகும்.

(வி - ம்.) கோட்டுமண் கொளல்-குத்திப்பெயர்த்தல். வேலோன் - முருகன். குவிமுலை கோட்டுமண் கொளப் புணர்மார்பின் வேலோன் எனக் கூட்டுக.

இதனை,

 "வாருயர் பெண்ணை வருகுரும்பை வாய்ந்தனபோல்
           ஏரிய வாயினு மென்செய்யும்-சீரிய
           கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலம்
           கோட்டுமண் கொள்ளா முலை."

என்னு முத்தொள்ளாயிரச் செய்யுளா னறிக.

(64)

 குருமொழி வேட்டு நந்திமா தவங்கள்
           குயிற்றிய குகையுமற் றவற்கு
 மருமலர் கடப்பந் தாரினா னழைத்த
           மணித்திரை நந்திநந் தினியும்
 பொருவில்செந் தமிழ்க்கு முதற்குரு வாகப்
           பொலிவரம் வரையுரங் கிழித்த
 முருகனுய்த் தளிப்ப வகத்தியன் போற்று
           மொய்யொளி யிலிங்கமு முளவால்.

(இ - ள்.) செவியறிவுறுதலை விரும்பி நந்தியெம்பெருமான் தவங்களைச் செய்த குகையும், அந் நந்தியெம்பெருமானுக்கு வாசனைவிரியும் கடப்பமாலையை யணிந்த முருகப்பெருமா னழைத்தருளிய