பக்கம் எண் :

192தணிகைப் புராணம்

முத்துக்களையுடைய அலைகளோடுகூடிய நந்திநந்தினி யென்னும் நதியும், ஒப்பில்லாத தமிழினுக்கு முதற்குரவனாகப் பொலிதற் கேதுவாகிய வரத்தினைக் கிரௌஞ்சகிரியின் மத்திய பாகத்தைப் பிளந்த முருகப் பெருமானருளிச் செய்ய, அகத்திய முனிவன் போற்றுகின்ற மிக்க ஒளியையுடைய இலிங்கமு மங்கணுள்ளனவாகும்.

(வி - ம்.) குருமொழி-உபதேசம். நந்திநந்தினி - ஓர் நதி.

(65)

 இந்திரன் பிரமன் மாதவன் சேட
           னிவர்வலிச் சூரன்கைக் கவர்ந்த
 அந்தமி றங்கள் வளம்பெற வேண்டி
           யருச்சித்த வருட்குறி பலவும்
 சுந்தர மனையை யிழந்தமா லரன்பாற்
           றுகளறு பெருந்தவ மாற்றி
 மைந்துபெற் றெண்ண முற்றிமீண் டருளை
           வழங்கவாழ் சேக்கையு முளவால்.

(இ - ள்.) இந்திரனும், பிரமனும், விண்டுவும், ஆதிசேடனுமாகிய இவர்கள் நெறிகடந்து செல்கின்ற வலியையுடைய சூரன் கைப்பற்றிய அழிவில்லாத தங்கள் செல்வங்களைப்பெற விரும்பி அருச்சனை செய்த அருளோடுகூடிய இலிங்கங்கள் பலவும், அழகினையுடைய மனைவியாகிய சீதையை இழந்த இராமன் சிவபெருமானிடத்திற் குற்றமற்ற பெரிய தவத்தினைச்செய்து (பகையை வெல்லும்) வலிமையைப் பெற்று எண்ணிய எண்ணங்களு முற்றுப்பெற்று மறுபடியும் அருளை வழங்க வாழ்கின்ற இடங்களுமுள்ளன வாகும்.

(வி - ம்.) இவர்தல் - நெறிகடந்து சேறல். வளம் - செல்வம். சுந்தரம் - அழகு. சேக்கை -இடம்.

(66)

 மாடகம் பொலிந்த திவவியாழ் முனிவன் வந்தனை புரியருட் குறியும்
 பீடகம் பொலிந்த வம்முனி மொழியப் பெருகிய வோகையி னிளையோன்
 தோடகம் பொலிந்த விணர்மலர்க் கூந்தற் சுந்தர வல்லியை மணந்து
 பாடகம் பொலிந்த வடிப்பிடி யோடும் பயிலுமப் பருப்பத முடைத்தால்.

(இ - ள்.) மனத்துட் பெருமை பொலிவுபெற்ற அந் நாரத முனிவன் சொல்லப் பெருகிய மகிழ்ச்சியான் முருகக்கடவுள் சென்று இதழ்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய பூங்கொத்துக்களையுடைய கூந்தலோடுகூடிய சுந்தரவல்லியாகிய வள்ளியம்மையாரை மணந்து, பாடகமென்னும் மணி பொலியப்பெற்ற அடியினையுடைய தெய்வயானையாருடனும் தங்கும் அத்தணிகை மலையானது, முருக்காணிகளாற் பொலிந்த நரம்புக் கட்டினையுடைய யாழ் ஏந்திய நாரத முனிவன் வணக்கம்புரியும் சிவலிங்கத்தையும் உடையது.

(வி - ம்.) பாடகம் - மகளிர் காலிலணியும் ஒருவகையணி; ஆசிரியர் நச்சினார்க்கினியர் "ஒரு கம்பியாப், பல முடக்காலே போக்குவரவு முண்டானாற் போலத் தோன்றிக் காலைவிடாதே கிடக்கும்" என்றனர்