பக்கம் எண் :

198தணிகைப் புராணம்

நின்மல சொப்பனமும் நின்மல சுழுத்தியுமாம், "திகழ்நிலை யிரண்டாவன -நின்மல துரியம் துரியாதீதமாம். இதனை "ஆவியும் கண்ணுத" லென்னும் இந்நூற் களவுப் படலம் 585 ஆம் செய்யுளானறிக. பேதம் அபேதம் பேதாபேதம் ஆகிய மூன்றும் தன்கட் டோன்ற நிற்றலே நிலையென்க. இங்ஙனம் கூறப்படும் பெரு நிலையாகிய நன்மை யென்க. பெருநிலை - நின்மல துரியாதீதம். தொன்மை - பண்டைப் பரிசு.

(76)

 அத்தகு வரைப்பி னெழுசுனை யாடி
           யருந்தவ மாதிக ளியற்றின்
 சித்தமா சிரிய விழிஞரு மொல்லை
           சிவத்தினைச் சிவணுவர் கண்டீர்
 இத்தகுமுனிவ ரெழுவர்க்கு நந்தி
           யெம்பிராற் குரியமா ணாக்கன்
 மெய்த்தவக் குமரன் விளக்கிய ததனை
           வினைச்சம மிலார்க்குரைக் கொணாதால்.

(இ - ள்.) அத்தன்மைத்தாகிய தணிகையின் கண்ணுள்ள ஏழுசுனையின் கண்ணு மூழ்கி அரியதவ முதலியவற்றைச் செய்து மனத்தின் கண்ணுள்ள குற்றமானது நீங்கத் தாழ்ந்தவரும் விரைவாகச் சிவத்தினோ டிரண்டறக் கலப்பார்கள். இத்தகுதியையுடைய முனிவர ரெழுவர்க்கும் எம்பிரானாகிய நந்திக்குரிய உண்மையாகிய தவத்தினையுடைய சனற்குமரன் விளக்கியதாகிய அப்பொருளை இருவினையொப்பு வாராதார்க்குச் சொல்லுத லியலா தென்க.

(வி - ம்.) இழிஞர் - பிராகிருதர். வினைச்சமம்-இருவினையொப்பு.

 என்றுமா தவத்துச் சூதமா முனிவ னியம்பலு மரும்பெரும் பொருளை
 இன்றுநாங் கேட்ப முன்புநாம் புரிந்த விருந்தவ மிருந்தவா வென்னென்
 றொன்றுமா னந்தக் கண்கணீர் பாய வுருகிய வுளத்தொடு மெழுந்து
 நின்றுவான் முனிவ ராங்கணோ ரைய நீத்திடக் கடாவின ரன்றே.

(இ - ள்.) (வினைச்சம மிலார்க்குக் கூறொணா) என்று பெரிய தவத்தினையுடைய சூதமுனிவன் திருவாய்மலர்ந்தருள இவ்வரும்பெரும் பொருளை யாம் இன்று கேட்ப முன்னர் யாமியற்றிய பெருந்தவமிருந்தது என்ன ஆச்சரியமென்று சொல்லிப் பொருந்திய ஆனந்தக் கண்ணீரொழுக இளகிய உளத்தோடு மெழுந்து நின்று உயர்ச்சி பொருந்திய முனிவர்களப்பொழுதுளவாகிய ஓரையத்தினை நீக்க வினாவுதலுற்றனர்.

(வி - ம்.) இருந்தது ஆ-இருந்ததென்ன ஆச்சரியம். வான்-உயர்வு.

 முனிவர ரெழுவர் கேட்டுளந் தூய்மை
           முற்றின ரெனமொழிந் தனையம்
 முனிவரர் யாவ ரத்தகு காதை
           மொழிந்தருள் காலமெக் காலம்