| கனிவருந் தீஞ்சொற் கட்டுரை யென்னக் | | கடாவுத வியமுனி வரர்க்குப் | | புனிதவெண் ணீற்றுச் சூதமா முனிவன் | | போக்கரு விடையெதிர் கொடுக்கும். |
(இ - ள்.) எழு முனிவர்கள் கேட்டு மனமாசு நீங்கிப் பரிசுத்தமெய்தினரென்று திருவாய்மலர்ந்தருளினாய். அம்முனிவரர் யாவர். அத்தகு காதையினைத் திருவாய்மலர்ந்தருளிய கால மெக்காலம். கனியின் இரதத்தை யொத்த தித்திப்பாகிய சொற்களாற் றொடுத்துத் திருவாய் மலர்ந்தருளுவாயென வினாவிய முனிவர்களுக்குப் பரிசுத்தமாகிய வெண்ணீற்றினை யணிந்த பெரிய தவத்தினையுடைய சூதமுனிவன் குற்றமிலவாகிய விடையினைத் திருவாய்மலர்ந் தருளுவான். (வி - ம்.) கனி - ஆகுபெயர். வரும் - உவமைச்சொல், இதனை "அரவரு நுண்ணிடைக் குரவரு கூந்தலென் - னுள்ளக்கருத்து விள்ளாளென்றது" என்னும் திருக்கோவையார் 81 ஆம் செய்யுட்கொளுவானு மதன் விசேடவுரையானு முணர்க. (79) வேறு | கறங்கு மணிவெண் டிரைமுகந்த கமஞ்சூற் கொண்ட லெனவரவின் | | உறங்குங் கடவுண் மலர்க்கமல வுந்தி யெழுந்த நரைத்தலையோன் | | பிறங்கிப் பகலிற் பதினால்வர் பீழை பெருக்கு மிடிகடியா | | அறங்கள் கிளரத் தனிச்செங்கோ லளிக்கு மனுக்க ளுளரவருள். |
(இ - ள்.) ஒலிக்கின்ற முத்துக்களை வெள்ளிய அலைகளையுடைய கடலின்கண் ணீரை முகந்த நிறைந்த சூலினையுடைய மேகமென்று சொல்லும்வண்ணம் ஆதிசேடன்மீது யோகநித்திரை செய்கின்ற விண்டு திருவுந்தித் தாமரையின் கண்ணே தோன்றிய வெளுத்த தலையினையுடைய பிரமன் விளங்குகின்ற பகற்காலத்திலே பதினால்வர்கள் துன்பினை மடுத்தற் கேதுவாகிய வறுமையை நீக்கித் தருமங்கள் விளங்க ஒப்பற்ற செங்கோலினைச் செலுத்தி உலகினைக் காக்கின்ற மனுக்களுள்ளார்கள், அவர்களுள். (வி - ம்.) கமம் - நிறைவு; "கம நிறைந் தியலும்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. நரைத்தலையோன்-பிரமன். பீழை-துன்பம். (80) | முந்து மரசன் சுவாயம்பு பிரிய வரதன் முதனால்வர் | | மைந்தர் தேவர் யாமாதி மகவா னரியே யுரிசிமுனி | | சந்த முலையா கிருதிதனைத் தழுவி யுயிர்த்த சுயக்கினன்மால் | | புந்தி நுனித்த புலத்தியனை முதலோர் பொருவி லெழுமுனிவர். |
(இ - ள்.) இம்மனுக்களுள் முந்திய அரசன் சுவாயம்புமனுவாகும். அவன் புதல்வர்கள் பிரியவரதன் முதலாகிய நால்வர்கள் தேவர்கள் யா முதலிய ஏனைய தேவர்கள். இந்திரன் - அரியென்னும் பெயருடையவன். |