பக்கம் எண் :

20தணிகைப் புராணம்

 மண்டு மாதவம் புரிந்தது வரத்தழீஇ
           வழிதர மேற்பெய்து
 கொண்ட தாமென வாவயின் விழுந்தநீர்
           குலாய்வழிந் ததையன்றே.

(இ - ள்.) முன்னர்க் காமதேனுவின் பாலிற்றோய்ந்த நந்தியங்குன்றானது ஒப்பற்ற உபமன்னிய முனிவர் தாம் முன்னர் (வசிட்டர் ஆச்சிரமத்தில்) உண்ட பாலின் சுவையை நினைந்து பெரிய தவத்தினை யியற்றித் திருப்பாற் கடலினையடைந்த பழைய நீர்மையினை யுணர்ந்து நெருங்கிய பெரிய தவத்தினைச் செய்தலால் அத்தவத்தின் பயனாக அப்பாற் கடல்வர அதனைத் தழுவி வழியும்படி தன் மேலே பெய்து கொண்டதுபோல அந்நந்தி மலையின்மேல் விழுந்த நீர் எங்கும் பரந்து வழிந்தது.

(வி - ம்.) அது என்றது பாற்கடலைச் சுட்டியது; ஆவயின் - சுட்டு நீண்டது; ஐ : சாரியை; அன்று, ஏ : அசை; பாற்கடலுண்டது வெளிப்படை - இது
தற்குறிப் பேற்றவணி.

(17)

 காந்தளம் போது வேய்ந்து களிமயில்
           கடாவிப் பல்பூ
 வேய்ந்தமென் குழற்கொம் பன்னார் வெறியயர்
           களத்துச் சார்ந்து
 வாய்ந்தவிங் குலிகச் சேற்றின் வயங்குதன்
           னுருவந் தோற்றிப்
 போந்துலாய்ச் சிலம்பின் செவ்வேள் போன்றது
           பாலி நீத்தம்.

(இ - ள்.) பாலியாற்றிற் செல்லும் வெள்ளமானது அழகிய காந்தட் பூவினை அலையாகிய கையாற் பறித்து அணிதலாலும், களிப்பையுடைய மயிலைச் செலுத்திப் பல பூக்களையணிந்த மிருதுவாகிய கூந்தலையுடைய பூங்கொம்பை யொத்த குறிஞ்சிநிலப் பெண்கள் வெறியாட்டுச் செய்கின்ற களத்தை யடைதலாலும் தன்கட் பொருந்திய சாதிலிங்கச் சேற்றினால் விளங்குகின்ற தன்னுடைய உருவைச் செந்நிறமாகத் தோற்றுவித்தலாலும் குறிஞ்சி நிலத்தில்வந்து பிறத்தலாலும் செந்நிறத்தோடுகூடிய முருகக்கடவுளை யொத்தது.

(வி - ம்.) சேற்றின் என்புழி இன்னுருபை முருகக்கடவுளை நோக்க உவமைப் பொருட்டாகவும் நதியை நோக்க ஏதுப்பொருட்டாகவுங் கொள்க. சிலம்பின் செவ்வேள் என்புழி நிலக்கிழமைக்கண் வரும் ஆறாவது விரித்துரைக்க; பாலிநீத்தமென்னும் எழுவாயை முன்வருவன வற்றிற்குங் கொள்க. காந்தட் பூவேய்தலும் மயிலைச் செலுத்தலும் வெறியாட்டிடத்துச் சேர்தலும் செவ்வேளுக்குரிய தொழிலாதலின் அத்தொழில் அந்நதியின் மாட்டு மமைந்திருத்தல் காண்க. செய்தெனெச்சங்கள் காரணப் பொருட்டாய் நின்றன. எண்ணும்மைகள் விகாரத்தாற் றொக்கன; மேல்வருவனவற்றிற்குங் கொள்க. இச்செய்