யுள் முதல் "கலையொடுவாளம்" (செய்யுள், 30) என்பதிறுதியாகவுள்ள செய்யுட்கள் சிலேடையணி. (18) | ஆழ்ந்தநீர்ச் சுனைபுக் காடி யவிர்பளிக் கறையின் வைகி | | வீழ்ந்தவ ராகந் தோய்ந்து வேங்கைதண் குறிஞ்சி குற்றுத் | | தாழ்ந்தபைங் குரல வேனற் றவிர்ந்துபுள் விலங்கு மோப்பி | | வாழ்ந்திடுங் கொடிச்சி மார்த மொழுக்கமு மரீஇய தாங்கண். |
(இ - ள்.) அக்குறிஞ்சி நிலத்தின்கண் அவ்வெள்ளமானது ஆழமாகிய நீர்ச்சுனைகளிற் புகுந்தாடுதலாலும் விளங்குகின்ற பளிக்குப் பாறையின்கண் தங்குதலாலும் தன்னுண்மூழ்கிய ஆடவர்களின் சரீரத்தைப் புல்லுதலானும் வேங்கைப் பூவையும் குளிர்ச்சிபொருந்திய குறிஞ்சிப் பூவையும் பறித்தலானும் தாழ்வாகிய பசிய கதிர்களையுடைய தினைப்புனத்தின்கட் டங்குதலானும் அத்தினைக் குரல்களைக் கவரவரும் பறவையையும் விலங்குகளையும் ஓட்டுதலானும் அக்குறிஞ்சிக்கண் வாழ்கின்ற வேடப் பெண்களின் ஒழுக்கத்தையும் பொருந்தியது. (வி - ம்.) அவிர்பளிக்கறை - வினைத்தொகை; அவிர்தல் - ஒளி வீசுதல். சுனையாடிப் பளிக்குப் பாறையிற்றங்கி விரும்பிய கணவர் மார்பைத் தோய்ந்து பூக்குற்றுப் புனத்திற்றங்கிப் புள்ளோப்புதல் கொடிச்சியார் செயலாகலின் அச்செயலை நதியுமுடைத்தாதல் காண்க. வீழ்ந்தவர் - கொடிச்சியரை நோக்க விரும்பியவரெனவும் நதியை நோக்கத் தன்னுள் விழுந்தவரெனவும் பொருள் கொள்க; குற்று - பறித்து; தவிர்ந்து - தங்கி; ஏனல், தனக்கிடமாகிய புனத்தை யுணர்த்தலின் ஆகுபெயர். (19) | கோழரை யகிலுஞ் சந்துங் குங்கும வனமுஞ் சாடி | | வாழிய குறிஞ்சி புக்கு வளத்தினை வாரி வித்தி | | வீழுமென் கிழங்கு கெண்டி விரைத்ததே னழித்து மாந்தி | | யூழுறு சிலைக்கை வேட ரொழுக்கமும் விராய தாங்கண். |
(இ - ள்.) அக்குறிஞ்சி நிலத்து அவ்வெள்ளமானது கொழுவிய தூரையுடைய அகின்மரத்தையும் சந்தனமரத்தையும் குங்குமவனத்தையும் அலையாகிய கையால் முறித்தலானும் குறிஞ்சியினிடத்துப் புகுந்து, ஆண்டுள்ள வளங்களையும் தினையையும் வாரிச் சிதறுதலாலும் நிலத்தின் கீழேவிழும் மெல்லிய கிழங்குகளைத் தோண்டியெடுத்தலானும் வாசனையுடைய தேன்கூடுகளைக் கெடுத்துத் தேனைத் தன்னுட் கொள்ளுதலானும் முறையாகவுற்ற சிலையோடுகூடிய கையையுடைய குறிஞ்சிநில மாக்களாகிய வேடர்களின் ஒழுக்கத்தையும் பொருந்தியது. (வி - ம்.) கோழரை - கொழுவிய அடிப்பகுதி; அஃதாவது வழு வழுப்பான அடிமரம். காடுவெட்டலும் தினைவித்தலும் கிழங்கெடுத்தலும் தேனழித்து உணவு கொள்ளுதலும் வேடரொழுக்கமாதலின் அவ் வொழுக்கினை நதியுமுடைத்தாதல் காண்க. வளத்தினை - வளங்களையெனப் பொருள்கொள்ளலுமாம். விரைத்த - மணந்த. மாந்தி - நதியை நோக்கத் தன்னுட் கொண்டெனவும் வேடரை நோக்க உண்டெனவும் பொருள் கொள்க. கெண்டி - தோண்டி; ஊழ்-முறை. (20) |