பக்கம் எண் :

22தணிகைப் புராணம்

 சிலையலங் கணிச்சி வெண்ணெய் தெவ்விவா னிமிர்ந்து வாரி
 நிலைபுகுந் துழக்கி யொல்கு நிலனெடுத் திருவி யண்டர்
 உலைதர வெறிக்கொண் டெற்றி யுறுகலி முடிவு தோற்றித்
 தலைவரு மாயோ னென்னத் தவழ்ந்தது புறவத் தம்மா.

(இ - ள்.) அவ்வெள்ளமானது முல்லைநிலத்தின்கண் வில்லையும் கலப்பையையும் பரசினையும் வெண்ணெயையும் வாரிக்கொள்ளுதலானும் ஆகாயமளவும் நிமிர்தலினாலும் கடலினிடத்துப் புகுந்து கலக்குதலாலும் வருவாய் சுருங்கிய நிலங்களை அலையாகிய கரங்களால் எடுத்து வளத்தின் மேம்படுத்தி நிறுத்தலானும் இடையர்கள் வருந்தும்படி வேகங்கொண்டு மோதுதலானும் மிக்க துன்பமுடிவைத் தோற்றுதலானும் அம் முல்லைநிலத்திற் கதிதெய்வமாய் வரும் மாயோனென்று சொல்லும்படி முல்லைநிலத்திற் சென்றது.

(வி - ம்.) சிலை, அலம், கணிச்சி, வெண்ணெய் ஆகிய நான்கின் குறிப்பால் முறையே இராமாவதாரமும், பலராமாவதாரமும், பரசுராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமுங் கொள்க. வானிமிர்ந்து என்ற குறிப்பால் வாமனாவதாரமும், வாரிநிலை புகுந்துழக்கியென்ற குறிப்பால் மச்சாவதாரமும் கூர்மாவதாரமும் அண்டர் உலைதர வெறிக் கொண்டெற்றி என்ற குறிப்பால் நரசிங்காவதாரமும் ஆகிய தசாவதாரமுங் கண்டுகொள்க. தெவ்வி - கைக்கொண்டு; தெவ்வுக் கொளற் பொருட்டே யென்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தா னுணர்க.

தெவ்வி யென்பதனை முன்மூன்றிடத்துங் கூட்டுக. வாரிநிலை - நீர் நிலை ஈண்டுக் கடலையுணர்த்திற்று; ஒல்குநிலன் - நிலைபெயர்ந்த பூமி; இருவி - இருத்தி; வினையெச்சம்; அண்டர் நதியை நோக்க இடையரெனவும் மாயோனை நோக்கத் தேவரெனவும், வெறி - நதியை நோக்க வேகமாகவெனவும், நரசிங்கத்தை நோக்க இரத்தமுண்ட மயக்கமாகவெனவும், கலிமுடிவு நதியை நோக்கத் துன்பமுடிவாகவெனவும், மாயோனை நோக்கக் கலியுக முடிவாகவெனவும் பொருள்கொள்க. தலை - அவ்விடமாகிய முல்லைநிலம்; வாரிபுகுதலை மீனுக்கும் உழக்கலை ஆமைக்குங் கொள்க; வாரியென்பதனை யீரிடத்துங் கூட்டுக.

(21)

 முளிதயிர் நறுநெய் பெய்யு மூரியங் கலன்கள் பாடி
 யுளியெடுத் தியங்கி யாங்காங் குற்றவை மாற்றிப் பொன்னும்
 தெளிமணித் திரளு மற்றுஞ் செறித்துராய்க் குளவிச் செந்தேன்
 துளிகுழற் பொதுவ மாதர் தொழின்மையும் பயின்ற தாங்கண்.

(இ - ள்.) அம்முல்லை நிலத்தின்கண் அவ்வெள்ளமானது ஆயர் பாடியிலுள்ள கட்டித் தயிரும் நறிய நெய்யும் பெய்துநிறைத்த பெரிய அழகிய கலசங்களை அலையாகிய கரங்களால் எடுத்துச் சேறலானும் ஆங்காங்குப் பொருந்திய பொருள்களைக் களைதலானும் பொன்னையும் தெளிந்த மணித்திரளினையும் ஏனைப் பொருள்களையும் குவித்துலாவுதலானும் காட்டுமல்லிகையின் செவ்விய தேனைத் துளிக்கின்ற கூந்தலையுடைய ஆய்ச்சியரது தொழிலின்றன்மையையும் பழகியது.

(வி - ம்.) நெய்க் கலசங்களையும் தயிர்க் கலசங்களையும் எடுத்து நகரங்களிற் சென்று பண்டமாற்றுதல் செய்து பொன்மணி முதலிய