சித்தாந்தத்தினை ஒற்றுமையுடன் கூடிய அன்பினாற் கேட்டறிந்த உயர்ச்சி பொருந்திய முனிவர்களிவராவார். இம்மை மறுமைப் பயன்களை யளிக்கும் இற்றைவரை பொருந்தியவர்களையும் இனிக் கூறுவாங்கேண்மின். (வி - ம்.) பிறங்கும் - விளங்கும். பிரசம் - தேன். உணர்தற் கருமையான மறையென்க. இருமை - இம்மை மறுமைகள். முற்றும்மை விகாரத்தாற் றொக்கது. (84) | நடலை யுலகத் துயர்துரக்கு நாலா மனுத்தா பதன்மைந்தர் | | விடபன் முதலோர் சத்தியகன் முதலா னோர்விண் ணவர்மகவான் | | அடல்வல் வினைதீர் திரிசிகன்மா லரினி யரிமே தசுபயந்த | | படர்முற் றிரிக்கு மரிமுனிவர் பழிப்பில் சோதி முதலானோர். |
(இ - ள்.) நடுக்கத்துடன் கூடிய துன்பத்தினை நீக்கும் நான்காவது மனுவரையன் தாபதனாம். மைந்தர் விடபன் முதலானோர்கள். இந்திரன் மிக்க வல்லமையோடு கூடிய தீவினை நீங்கிய திரிசிகன். விண்டு, அரினியென்பவளும் அரிமேதசுவும் பெற்ற துன்பமுற்றிலும் நீக்குகின்ற அரியென்பவனாகும். முனிவர்கள் குற்றமில்லாத சோதி முதலாகிய எழுவர்களுமாவர். (வி - ம்.) நடலை - நடுக்கம். "நடலைவஞ்சனை பொய்யென்ப நடுங்கிய நுடக்க முப்பேர்" என்னும் நிகண்டானறிக. (85) | விரித்த வீண்டை விண்ணவர்கள் விதுர்த னுயிர்த்தோ ரொழுக்கனைத்தும் | | தெரித்த வேத நூன்முழுதுந் தெவ்வா தோப்பி மடமூழ்கி | | வரித்த கழற்கா லவுணர்நனி வருத்த வாழ்நாள் வல்லையவண் | | இரித்து ளார்வை துருதேய ரென்னும் பெயரு மிவர்க்காகும். |
(இ - ள்.) இவ்விடத்து விரித்துக் கூறிய தேவர்கள் விதுர்தன னென்பவன் பெற்றோர்கள். ஒழுக்கமெல்லாவற்றையும் தெரிவித்த வேதநூன் முற்றிலுங் கைக்கொள்ளாது ஓட்டி அறியாமையின் கண் மூழ்கிக் கட்டுற்ற வீரக்கழலினை யணிந்த காலோடு அவுணர்களே வருத்த வாழ்கின்ற காலத்து (அவ்வவுணர்களை) அவ்விடத்தினின்றும் கெடுத்துள்ளனர். வைதுருதேயரென்னும் பெயர் இவர்க்குப் பொருந்தும். (வி - ம்.) தெவ்வாது - கைக்கொள்ளாது. "தெவவுக் கொளற்பொருட்டே" யென்னும் தொல்காப்பியச் சூத்திரத்தானறிக. ஓப்பி - ஓட்டி. வல்லை - விரைவாக. இரித்தல் - கெடுத்தல். வைதுருதேயர் - பிதிரரில் ஒரு சாரார். (86) | ஐந்தா மனுவேந் தரைவதக னான்ற மைந்த ரருச்சுனனை | | முந்தை யுடையோர் பூதரதன் முதலோ ரமரர் சதக்கிருது | | மைந்து மிகுந்த விபுபுமால் வளைத்தோட் சுருபி சுப்பிரன்பால் | | அந்தில் வரும்வை குண்டனிர ணியரோ மனையா தியர்முனிவர். |
|