பக்கம் எண் :

202தணிகைப் புராணம்

(இ - ள்.) ஐந்தாவது மனுவரையன் அரைவதகன். பெருமை பொருந்திய பிள்ளைகள் அருச்சுனனை முதலாக வுடையோராவர். இந்திரன் வலிமை மிக்க விபுபு என்பான். தேவர்கள் பூதரதனை முதலாவுடையோராவர். விண்டு வளையலையணிந்த தோளினையுடைய சுருபியென்பவள் சுப்பிரனென்பவனைக் கூடியதனாற்றோன்றிய வைகுண்ட னென்பவனாகும். முனிவர்கள் இரணிய ரோமனை முதலாகவுடைய எழுவராவர்.

(வி - ம்.) சதக்கிருது - இந்திரன். மைந்து - வலி.

(87)

 ததைசீ ராறா மனுச்சக்கு தந்தோன் சாக்கு தப்பெயரோன்
 புதல்வர் புருடன் முதலானோர் புலவ ராப்பியர் கண்முதலோர்
 மதவிந் திரன்மந் திரதுருமன் வயிரோ சனற்சம் பூதிபுணர்ந்
 துதவு மசிதன் மான்முனிவ ரவியன் முதலா முறுவர்களே.

(இ - ள்.) நிறைந்த சிறப்பினையுடைய ஆறாவது மனுவரையன் சக்கு வென்பவனாற் பெறப்பட்ட சாக்குதனென்னும் பெயரினையுடையோனாவன். இவன் மைந்தர்கள் புருடன் முதலாகியவர்கள். தேவர்கள் ஆப்பியர்கள் முதலானவர்கள். வலியினையுடைய இந்திரன் மந்திரதுருமன். விண்டு, வயிரோசன் சாம்பூதி யென்பவளைக் கூடிப் பெற்றவனாகிய அசிதனாகும். முனிவர்கள் அவியன் முதலாகிய எழுவரென்க.

(வி - ம்.) மதவென்னு முரிச்சொல் ஈறுதிரிந்து மத என நின்றது. மதவு - வலி. "பதவுமேய்ந்த மதவுநடை நல்லான்" என்புழிப்போலக் கொள்க. உறுவர் - முனிவரர்.

(88)

 ஈண்டை விளம்பு முனிவரரு மிருள்கால் சீத்து நிலவெறிக்கும்
 மாண்ட திருநீற் றுக்கவயம் வயங்கு மணிமே னியிற்றிளைப்பப்
 பூண்ட சிவமுள் ளகந்திளைப்பப் பொலிந்த குமரன் றனையடைந்து
 மூண்ட விழைவி னடித்தொண்டு முறையிற் புரிந்த நெறியோரே.

(இ - ள்.) இவ்விடத்துக் கூறிய முனிவர்களும், இருளைத் துடைத்து ஒளி வீசுகின்ற பெருமை பொருந்திய திருநீற்றின் வடிவமாகிய கவசமானது விளங்கு முத்திராக்கத்தை யணிந்த மேனியின்கட் படிய எங்கும் வியாபகமாகிய சிவத்தினை அகத்திலனுபவிக்க விளங்குகின்ற சனற்குமர முனிவனையடைந்து முயன்ற விழைவினாற் றிருவடித் தொண்டினை முறையாகச் செய்த முறைமையினை யுடையவராவர்.

(வி - ம்.) முனிவரருமென்றவும்மை, இறந்தது தழீஇய எச்சவும்மை; மூன்றாமனுவந்தரத்தினுள்ளாரையேயன்றி யிவ்வாறாமனுவந் தரத்திலுள்ளாருமெனக் கூறலான். மணி - உருத்திராக்கம்; அழகிய மேனி யெனினுமாம். திளைப்ப - படிய. பூண்ட - வியாபித்த. சிவம் இரண்டாவதன்றொகை. உள்ளகம் - உள்ளிடம். திளைத்தல் - அனுபவித்தல். குமரன் - சனற்குமரன். மூண்ட - முயன்ற.

(89)

 துரிசி லேழா மனுவைவச் சுதனாற் சாதத் தேவர்களே
 பரனே சர்வ வித்தமனே பயின்மா னுடரே கசேருவ்வே