(இ - ள்.) இயமனும் நடுங்குவதற் கேதுவாகிய சபிக்கப்பட்டோராற் பொறுத்தற் கருமையாகி அழியாத சாபமாகிய ஆற்றலையுமுடைய பெரிய தவத்தினையுடையவர்களே ! பிறப்பு மிறப்புங் கெட இன்பத்துறையிற் படிதற் கேதுவாகிய இருவகை யருளில் வைத்து (யாவராலும்) உயர்த்துச் சொல்லப்பெறும். மலநீங்கிய சொல் வடிவமாக விளங்குகின்ற அருள் இத்தணிகை மான்மியமாகும் முருகக் கடவுளை வணங்கி இனிதாகக் கேளுங்கோளென்று (கல்வியாற்றல் தவமொழுக்க முதலியவற்றான்) ஒப்பிலாத சூதமுனிவன் சொல்லத் தொடங்கினான். (வி - ம்.) அருள் இரண்டு - சொல் வடிவாகவுள்ளதும், பொருள் வடிவாகவுள்ளது மாகிய இரண்டாம். இனி, மந்திரகலை தந்திரகலையென இரண்டென்பாரும், புராண வடிவமாகவும் மந்திர வடிவமாகவும் உள்ளதென்பாரும் எனப் பலதிறத்தாற் பொருள் கூறுவர். (93) புராண வரலாற்றுப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம் 441. |