பக்கம் எண் :

வீராட்டகாசப் படலம்205

வீராட்டகாசப் படலம்

 பூமணமு முடலுயிரும் பொன்விழியு
           மெனும்புணர்ப்பா ருயிர்கள் பண்டு
 தோமடையப் பார்த்திருந்து மெண்குணத்திற்
           றிரியாது துகடீர் பாகம்
 தாமடைய வெவ்வுயிர்க்கு மொருங்குறுத்தா
           திருந்துமொரு சலமு மில்லா
 வீமலிபொற் கடுக்கையந்தார் வீராட்ட
           காசன்விரை மலர்த்தாள் போற்றி.

(இ - ள்.) மலரும் மணமும், உடலுமுயிரும், கதிரொளியும் கண்ணொளியுமென்று சொல்லும்வண்ணம் (சிவமாகிய தன்னொடு) கலத்தலையுடைய ஆன்மாக்கள் அனாதி காலத்தே (ஆணவமலமாகிய) குற்றத்தின்கட் பொருந்துதலை யறிந்து வைத்தும் (தன்வயத்தனாதன் முதலிய) எண்வகைக் குணங்களினின்றும் சிறிதும் விகாரமடையாது (அவ் வான்மாக்கள்) குற்றம் நீங்கிய மலபரிபாகத்தினை யடையும் வண்ணம் அவைகட் கொருசேரப் பக்குவத்தினை அறிவிக்காதிருந்தும் (தன்னிறைமைக்) கொரு சிறிது மாறுபாடுமில்லாத கொன்றை மரத்தினது பொன்போன்ற மலர்களாலாகிய அழகிய மாலையையணிந்த வீராட்டகாசனாகிய சிவபெருமானது வாசனையோடுகூடிய தாமரை மலர்போன்ற திருவடிகளை
வணங்குவாம்.

(வி - ம்.) பொன் - சூரியன்; "பொன்னிற் பொலிந்த நிறத்தான் தோன்ற" என்னு மணிமேகலை யடியானுணர்க. பூமணம் பொன்விழி உடலுயிர் இம்மூன்று மிறைவனு முயிரும் கலப்புற்று நிற்றற் குவமையாக் கொள்க. புணர்ப்பினை யுடைய ஆருயிரெனக் கூட்டுக. புணர்ப்பு - சம்பந்தம். பண்டு - அனாதியே. தோம் - (ஆணவமலமாகிய) குற்றம்; "தோமுறக் கொண்டா ரெனச்சிறை யிடல்போல்" என்னும் காஞ்சிப்புராணச் செய்யு ளடியானுணர்க. "முதல்வனாவான் முற்றுணர்வுடைமையின், உலகத்துயிர்கள் படும்துன்ப முழுவதும் உணர்ந்தோனாகியும், பேராற்றலுடைமையின் உயிர்களை யெல்லாம் ஒருங்கே வீடுபேறடையச் செய்யாமையின், வரம்பிலின்பமுடைமை. பேரருளுடைமை முதலிய குணங்கட்குக் குறைவரு மென்பாரை மறுத்து "எண் குணத்துத் திரியாதென்றும்; இவ்வான்மாக்கள் ஒருங்கே வீடுபே றடைதற்கண் ஒருப்பாடு மிக்குடையனா யிருந்தும் இவ்வான் மாக்களால் அநாதியே யீட்டப்பெற்றுப் பல வேறு வகைப்பட்ட துன்பங்களை யெல்லாம் விளைவிக்கும் வினைவலியினையும், கொடுமைக்கு மூலமாகிய சகசமலத்தினையும் கெடுத்து ஒருங்கே வீடுபேறடைவியாமைக்குக் காரணம் அம்முதல்வன் சிறப்பியல்பாகிய மெய்யுணர்வு ஒருங்கே நிகழாவண்ணம் தடுத்துநிற்பது மலசத்தி யென்பார் "ஒருங்குறுத்தா திருந்துமொருசலமு மில்லா" என்றார். சலம் - மாறுபாடு: கோட்டம். "சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய்" என்னும் சிவஞான போத வுதாரண வெண்பாவா னறிக. பாகம் - மலபரிபாகம். இல்லா: ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இச்செய்யுளின் கருத்து சிவ